பக்கம் எண் :

39

வேண்டுவதின்று); பொய்கைநல் ஊரன் திறம கிளப்ப என் உடையை - வாவிகள் சூழ்ந்த நல்ல மருத நிலத்தலைவனது நற்பண்புகளை எமக்குக் கூறுவதற்கு நீ என்ன உரிமை உடையாய்; அஃது அன்று எனினும் - அவன் பிழைசெய்தது பிழையன்று என்றாலும்; நெறியின் செய்தி அறிந்தேம் யாம் - முறையாக அவன் செய்தி முழுவதும் நாம் அறிந்தனம்; (நீ கூறல் வேண்டுவதின்று என்றாள்.)

(வி-ம்.) வாயில்களிற் சிறந்தவன் பாணனாதலால் பாணனை வாயில் விடுத்ததாகவும் அவன்பாற் கூறியதாகவும் துறை கூறப்பட்டது. ‘’பாண! நீ’’ என வருவித்துக்கொள்க. இத்துணைக்காலமும் பரத்தையர் சேரியிற் பல இன்றியமையாச் செயல் முடிப்பது கருதித் தங்கினர். பரத்தையரைக் கண்ணாற் கூடப் பார்த்திலர்; அவர்மேற் பிழையின்று சேரிசென்று தங்கியது பிழையெனினும் பொறுத்தருள்க எனப் பாணன் வேண்டினன் எனவும், தலைவி ‘’எனக்கு அவர் துணையாக இனிவந்து தங்க வேண்டுவதின்று; புதல்வன் இருக்கின்றான்; அவன் மழலைச்சொற் கேட்டுப் பொழுது இனிதாகக் கழிகின்றது. அவன் செய்தது பிழையன்று என்றும் பிழைதான் எனவும் நீ சொல்வதற்கு என்ன உரிமையுண்டு அவன் செயல்கள் யாவும் யாம் அறிந்து மனத்திலமைத்திருக்கின்றோம் செல் என்று கடிந்தாள் என விளக்கம் காண்க. ‘’கல்லாமழலைக் கனியூறல் கலந்து கொஞ்சுஞ் சொல்லாலுருக்கி’’ என்று மக்கள் குதலைச் சொல்லினிமையைக் கூறியதுபோல ஆசிரியர் ‘’இனிய சொன்னீர்வாய் மழலைச்சிறுவன்’’ என்றார். ‘’குழலினிதி யாழினிதென்பதம் மக்கள், மழலைச்சொற் கேளா தவர்’’ என்ற குறட் கருத்தும் நோக்குக.

(இ-பு.) நன்மை + ஊரன்: நல்லூரன் பண்புத்தொகை. உடையை: குறிப்புவினை முன்னிலையொருமை வினைமுற்று. அறிந்தோம்: தன்மைப் பன்மையிறந்தகால வினைமுற்று. மழலை: உரிச்சொல்.