பக்கம் எண் :

4

தின்று சுவைத்திருக்கும் இயல்புடைய; பாசம் பட்டு ஓடும் படுகல் - பாசமுண்டாக நீரோடுகின்ற உயர்ந்த கற்களையுடைய மலைநாடற்கு - மலைநாட்டுத் தலைவன் பொருட்டு; என் நெஞ்சு ஆசையில் தேம்பும் என் நெஞ்சமானது காதலால் வருந்துகின்றது, (என்று தோழியினிடம் கூறினள்).

(வி-ம்.) சுனை என்பது மலையருவி வந்து பெருகி நிற்கும் நீர் நிலை. அந்நீர்நிலை பாசம் படர்ந்திருப்பதும் நீரில் முளைக்கும் ஆம்பல் முதலிய கொடியிலைகள் படர்ந்து பசுமையாகத் தோன்றுவதும் இயற்கை. ஆதலால் ‘’பாசிப் பசுஞ்சுனை’’ என்றார். புது நீர் வந்து பாய்ந்தவுடன் அச்சுனையிலுள்ள முது நீர் புது நீருடன் கலந்து வெளிவரும் என்பது குறித்து ‘’அழி முது நீர்’’ என்றார். அழி என்பது சுனையின்மேற் பொங்கி வழிகின்ற எனப் பொருள் தந்தது. மந்திகள் காரணமின்றி ஒன்றோடொன்று சினந்து போரிடும் இயற்கையுடையன என்பது குறித்து, ‘’காய்சின மந்தி’’ என்றார். நீர் இடையறாது ஓடுவதால் கற்கள் பாசமுண்டாக்கி வழுக்கும் இயல்புடையனவாம் என்பது தோன்ற, ‘’பாசம் பட்டு ஓடும்’’ என்றார். பட்டு என்பதை பட எனத் திரித்துப் பொருள் கொள்க. மலைநாடன் களவொழுக்கம் மலைநாட்டின் இயல்பு போல இருக்கின்றது எனக் குறிப்பாலுணர்த்தியது இது.

பாசிப் பசுஞ் சுனையைக் குறவர் குடியாகவும், அதன் பாங்கர் அழிமுது நீரைத்தலைவி பிறந்த மனையாகவும், அம்முது நீரில் வந்த கனி தலைவியாகவும், அக்கனியை மந்தி சுவைப்பது தலைவியைத் தலைவன் கூடி யின்புறுவதாகவும், பாசம் பட்டு ஓடும் படுகல் என்றது களவொழுக்கமாகவும் உள்ளுறையுவமை கொள்க.

(இ-பு.) பசுமை + சுனை. முதுமை + நீர் முன்னது: மை கெட்டு இனவெழுத்து மிக்குப்புணர்ந்தது. பின்னது ஈறு கெட்டுப் புணர்ந்தது. காய்சினம்: வினைத்தொகை. கனி சுவைக்கும்: இரண்டனுருபுத் தொகை, படுகல்: வினைத்தொகை.