இதுவும் அது 42. நீத்த நீரூர னிலைமையும் வண்ணமும் யார்க்குரைத்தி பாண வதனால்யா மென் செய்தும் கூத்தனாக் கொண்டு குறைநீ யுடையையேல் ஆட்டுவித் துண்ணினு முன். (சொ-ள்.) பாண - பாணனே! நீத்தம் நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும் யார்க்கு உரைத்தி - பெருக்கமான நீரையுடைய மருத நிலத்தலைவனுடைய நல்லொழுக்கமும் நற்பண்புகளும் நீ யார்க்கு எடுத்துக் கூறுகின்றாய் (அவன் இயல்பு நாங்கள் அறியாதவர்களா? அறிந்தவர்களே; ஆதலாற் கூறவேண்டுவதின்று) அதனால் யாம் என் செய்தும் - புறத்தொழுக்கம் உடையவன் என்பதை நாங்கள் அறிந்ததனால் என்ன செய்வோம். (ஒன்றும் செய்ய வழியறியோம்) குறை நீ உடையையேல் - நீ உணவு உடை முதலிய குறைபாடுகளை உடையாய் என்றால்; கூத்தனா கொண்டு ஆட்டுவித்து உண்ணினும் உண் - எம் தலைவனை ஆடுவோனாக அமைத்துப் பலவிடங்களில் ஆடும்படி செய்து நீ பொருள் வாங்கியுண்டாலும் உண்க. (அது குறித்து நாம் வருந்தோம் என்றாள்.) (வி-ம்.) அவனோடு கூடி வாழ்க்கைத்துணையாகப் பலநாள் வாழ்ந்து மகப்பெற்று மகிழ்ந்திருக்கும் எனக்கு அவன் நல்லொழுக்கமும் நற்பண்பும் தெரியும் அன்றோ? அறியாதவர்க்கல்லவோ விளக்கிக் கூறவேண்டும் என்ற கருத்து விளங்க ‘’யார்க்குரைத்தி’’ என்றாள். அவன்பிழையையாம் அறிந்தாலும் அவனே தலைவன் ஆதலால் நாங்கள் பொறுத்திருக்க வேண்டிய கடமையுடையோம்; அவனை யொறுத்தடக்கும் இயல்பில்லோம் யாம் என்பாள் ‘’என் செய்தும்’’ என்றாள் நீ இசைபாடுவோன்; எம் தலைவனை ஆடுவோனாக அமைத்துக் கொள்ளல் நலம்; நீவி ரிருவரும் பாடலும் ஆடலும் புரிந்து பல பரத்தையரை மயக்கி எம் தலைவன் வயப்படுத்திப் பொருள் பறித்து நீ உண்பதற்கு ஏதுவாம் என்று பழித்துக் கூறியதாகக் கொள்க. பாணனே நீ எம் தலைவனை ஆட்டுவிக்கின்றாய்.
|