நின்சொற்படியே பரத்தையர் சேரியிற்பயின்று திரிகிறான் அவன் புறத்தொழுக்கத்திற்குத் துணை நீயே! அவனை வசப்படுத்திப் பரத்தைய ரின்பங்காட்டி அவன்பாற் பொருள் பறித்துப் பரத்தையர்க்கும் வழங்கி நீயும் உண்டு வாழ்கின்றாய்; இஃது உனக்கு இழிவு என்பது தோன்றவில்லை என்ற கருத்துப் புலப்பட ‘’உண்ணினும் உண்’’ என்றாள். எனவே வாயில் மறுத்தாளாயிற்று. (இ-பு.) நீத்த நீர் - பண்புத்தொகை. உரைத்தி - முன்னிலை யொருமை வினைமுற்று. உண் ஏவல் வினைமுற்று. ஆட்டுவித்து - பிறவினை வினையெச்சம். செய்தும் - தன்மைப் பன்மை வினைமுற்று. இதுவும் அது 43. போதவிழ் தாமரைப் பூந்துறை யூரனைத் தாதவிழ் கோதைத் தகையியலார் தாம்புலப்பர் ஏதின்மை சொல்லி யிருப்பர் பிறர் மகளிர் பேதைமை தம்மேலே கொண்டு. (சொ-ள்.) போது அவிழ் தாமரை பூ துறை ஊரனை - அரும்புகள் மலரும் தாமரைப் பூக்கள் நிறையும் நீர்த்துறையையுடைய மருத நிலத்தலைவனை; (எம் காதலனை) தாது அவிழ் கோதை தகை இயலார் - மகரந்தம் பரவிய பூமாலை புனைந்த எழில் காட்டும் இயற்கையுடையார் (பரத்தையர்) பிறர் மகளிர் பேதைமை தம் மேலே கொண்டு - அயலார் பெற்ற மங்கையருடைய அறியாமையைத் தம்பா லிருப்பதாக ஏற்றிக் கூறி, ஏதின்மை சொல்லி இருப்பர் தாம்புலப்பர் - பகைமை கூறி இருந்து தாம் பிணங்குகின்றனர் (என்று பலர் வாயிலாகக் கேட்கின்றேன் நான் என்றாள்) (வி-ம்.) பாண! என்ற சொல் வருவித்துக்கொள்க. அரும்பு விரியும் தாமரைப் பூக்கள் நிறைந்த நீர்த்துறை போலப் பரததையர் சேரியிற் பலரும் பூப்பெய்துகின்றனர். வண்டுபுதிதாகப் பூத்தமலரை விரும்புவது போலத் தலைவனும் புதிய புதிய பரத்தையரை நாடித்திரிகின்றான் என்ற குறிப்புத் தோன்ற ‘’போதவிழ்
|