மூத்தேம் - இஞ்ஞான்று மூப்புப் பருவமடைந்தோம்; (ஆதலால் வெறுத்தனன்) கார் தண்கலி வயல் ஊரன் - நீர்நிறைந்த குளிர்ந்த தழைத்த வயல் சூழ்ந்த மருத நிலத்தலைவன்; (எம் தலைவன்) எமக்கு பாத்து இல் பயம் மொழி பண்பு பல கூறி - எமக்குப் பிரிவில்லாத பயன்தரத்தக்க சொற்களையும் அவன் நற்பண்புகளையும் எடுத்துக்கூறிக் கூடிக்கலந்து; கடிது இன்று நீத்தல் அறிந்திலேம் - விரைவில் இந்நாளில் எம்மை விட்டுப் பிரிந்துவிடுவான் என்பதை அந்நாள் அறியாமல் இருந்தோம். (அறிந்தாற் கூடிவாழ்வேமா என்று கூறினள்). (வி-ம்.) இளையேம் ஆயினாம் என்றதனால் மூத்தேம் என்பதற்கு அங்ஙனம் ஆதலிலேம் என்பது குறிப்பாக வருவிக்கப்பட்டது. நீ வேறு நான் வேறு அல்ல; ஈருடல் ஓருயிராகக் கருது; நின்னைப்பிரியேன்; பிரியினும் உயிர்தரியேன்; இது தெய்வத்தின் ஆணை; பொய்யல்ல மெய்யுரையே என்று இயற்கைப்புணர்ச்சியில் தலைவன் கூறி வேண்டினன் என்பது தோன்ற ‘’பாத்தில் பயமொழி’’ என்றாள். வாய்மை வழுவேன்; பொய்யுரை கூறேன்; புறத்தொழுக்கம் விழையேன் என்பன போன்று தலைவன் முன்னர்க்கூறிய சொற்களே ‘’பண்பு பல’’ என்றது. ‘’கடிது இன்று நீத்தல்’’ என்றது. இன்னும் எமக்கு இளமை நீங்கவில்லை; ஒரு மகவேயன்றி மறு மகப் பேறெய்திலோம். கூந்தல் நரைத்திலது; கொங்கைகள் சாய்ந்தில; இத்துணை விரைவில் பிரிதல் என்ற கருத்தையுட் கொண்டது. முன்னரே இப்பண்புடையவன் என அறிந்திருந்தால் இவனைக் கணவனாக மணந்திரேன் என்ற கருத்தினால் ‘’அறிந்திலேம்’’ என்றாள். இவ்வாறு புறத்தொழுக்க முடைய தலைவனையாம் வரவேற்பது தகவன்று என்று வெறுத்து வாயில் மறுத்துக் கூறினள் தலைவி எனக்கொள்க. (இ-பு.) மூத்தேம்; ஆயினாம், இளையேம் தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள். தன்மை யொருமையில் வந்தன. வழுவமைதி பயன் - பயம் போலி. நீத்தல்: தொழிற் பெயர். பயமொழி: இரண்டனுருபும் பயனும் உடன்றொக்கதொகை.
|