எம்மனைக்கு வருக; எம்மனைக்கு வருக என்று முந்தியழைப்பதும், ஒருத்தி மனைக்குச் சென்றாள் அவளோடு மற்றொருத்தி சொற்போர் தொடுப்பதும் இயற்கை. செருக்கு மக்கட்குள்ள பண்பு என்னினும் நீர்க்கொடிகளும் செருக்குக்கொண்டு குத்தின எனத்தோன்றும்படி ‘’செருக்கு ஆர்’’ என்றார். பாணன் ‘’தலைவன் பரத்தையர் மனைசென்றிலன்; வேறோர் செயல் குறித்துச் சேரியில் தங்கினன். அது இப்போதுதான் முற்றுப் பெற்றது. அது குறித்து ஊடல் தக்கதன்று என்று பல பொய் கூறியது கண்டு ‘’பொய்ப்பாண’’ என்று விளித்தாள், எம்முடைய மனைக்கு வாரற்க பரத்தையர் பாலே தங்குக எனக் கூறிவாயில் மறுத்தாள். (இ-பு.) அரக்காம்பல்; பண்புத்தொகை. அஞ்செங்கழுநீரும் அது. வளவயல்: என்பதும் அது. பொய்ப்பாண இரண்டனுருபும் பயனும் உடன் தொக்கதொகை. வரல் - எதிர்மறை வியங்கோள். வாரற்க என்பது. இதுவு மது 48. கொக்கார் வளவய லூரன் குளிர்சாந்த மிக்கவனமுலை புல்லான் பொலிவுடைத்தா தக்கயாழ்ப் பாண தளர்முலையாய் மூத்தமைந்தார் உத்தரம் வேண்டா வரல். (சொ-ள்.) தக்க யாழ்பாண - தலைவனுக்குத் தகுதியான யாழைக் கையிற்பற்றிய பாணனே! கொக்கு ஆர் வளம் வயல் ஊரன் - கொக்கு என்ற பறவைகள் மீன் பிடித்துத் தின்பது கருதி வந்து நிறைந்திருக்கும் வளம் பொருந்திய வயல் சூழ்ந்த ஊரன் (எம் தலைவன்) குளிர் சாந்தம்மிக்க வனமுலை பொலிவுடைத்தா புல்லான் - குளிர்ந்த சந்தனக்குழம்பு பூசிய எழில் மிகுந்த பரத்தையர் கொங்கைகளை தன்னுடல் விளக்கமுறும்படி தழுவாமல்; தளர் முலை ஆய் மூத்து அமைந்தார் உத்தரம் வேண்டா - சரிந்த கொங்கையாகி மூப்புப் பொருந்திய மகளிர் ஆகிய எச்சில் வேண்டா. வரல் - இங்கு வாரற்க (என்றாள்).
|