- காமநோயால் பொறுக்கலாற்றாது நான் உடல் மெலிந்த வாற்றினை (தோழி நீ) கூறுவாய் (என்றாள்). (வி-ம்.) நாவாய் வழங்கும் கடல், நளிதிரைக்கடல் தண்கடல் எனக் கூட்டுக. இறா, இறவு; இற என்று வழங்கும். இறா மீன் என்பது ஒரு சிறிய மீன் அது அலையுள் அலைந்து சேர்ந்து ஒல்லென்ற ஒலியுடன் கரையோரம் வந்து ஒவ்வொன்றாகக் கூடும் எனவும் அவ்வாறு கூடிய மீன்கள் குவியலாகத் தோன்றும் எனவும் கூறினர். இறவு மீன்குவியல் பரவிய கரை என்று கொள்க. சேர்ப்பன் என்பது நெய்தனிலத்தலைவனைக் குறிக்கும் பெயர். இறாமீன்கள் அலையால் வருந்தி மெல்லென்ற ஒலியுடன் கரையை வந்து அணுகியிருக்கும் இயற்கை கண்டவன்தலைவன் ஆதலால் அவனுக்கு என் நிலைமையினைக் கூறின் அறிவான் என்பது கருத்து. தாய்தமர் பழித்துரைக்கும் அலரறிந்து வருந்திய நிலைமையும் பிரிவாற்றாத நிலைமையும் அதனால் உடல் மெலிந்து நாளுக்கு நாள் நலிவதையும் கூறுக என்றாள். நீ விளக்கிக் கூறின் விரைந்து வந்து என்னை வரைந்து கொள்வான்; என்துயரமும் நீங்கும் எனத்தோழிக்கு அறிவித்தாளெனக் கொள்க. (இ-பு.) நளிதிரை: பண்புத்தொகை. தண்கடல் என்பதும் அது. ஓவா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ஒல்லென்: ஒலிக்குறிப்பிடைச் சொல். இறாக்குப்பை: ஆறாம் வேற்றுமை. 50. நெடுங் கடற் சேர்ப்ப நின்னோ டுரையேன் ஒடுங்கு மடற் பெண்ணை யன்றிற்குஞ் சொல்லேன் கடுஞ்சூளிற் றான்கண்டு கானலுண் மேயுந் தடந்தாண் மட நாராய் கேள். (சொ-ள்.) நெடுங்கடல் சேர்ப்ப - நீண்ட கடற்கரையாம் ஆடவனே. நின்னோடு உரையேன் - உன்னோடு நான் ஒன்றுங்கூறேன். ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன் - ஒடுங்கிய மடல் பொருந்திய பனையில் வாழும் அன்றிற்பறவைகட்கும் உரையேன். கடுஞ்சூளில் தான்கண்டு கானலுள் மேயும் - எம் தலைவன்
|