கல் + மலை = கன்மலை, ஆசையில் தேம்பும் எனக் கூட்டுக. இதுவு மது 4. ஓங்கல் விழுப்பலவி னின்பங் கொளீஇய தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன் றான்கலந் துள்ளாத் தகையனோ நேரிழாய் தேங்கலந்த சொல்லிற் றெளித்து. (சொ-ள்.) நேரிழாய் - என்தோழீ!; ஓங்கல் விழு பலவின் இன்பம் கொளீஇய தீகனி - உயர்ந்த சிறந்த பலா மரத்திற் பழுத்த இன்பத்தைத் தருகின்ற இனிய கனியை; மாவின் முசு பாய் மலைநாடன் - மாமரத்திலிருந்து கருங் குரங்குகள் பாய்ந்து கவரும் மலைநாடன் ஆகிய தலைவன்; தேம் கலந்த சொல்லால் தெளித்து தான் கலந்து - இனிமை பொருந்திய சொற்களால் சூளுரை கூறித் தெளிவித்து முன் தானே வந்து கூடிப் புணர்ந்து; உள்ளாத் தகையானோ - பின்பு அதனை நினையாது மறக்குந் தன்மையுடையவனோ, (கூறுக என்றாள்). (வி-ம்.) தகையனோ என்றது அத்தகைய னல்லன் மறவாது வந்து மணப்பான் எனக் கருதுகின்றேன்; உன் கருத்து யாது என்று வினவியவாறாம் இது. மலைநாட்டினியல்பு போல அவனியல்பும் இருந்தது என்று குறிப்பினாற் றோன்றும்படி தோழிக்குக் கூறியது இது. மாமரத்திலிருந்து குரங்கு தாவிப் பலாப் பழத்தைக் கவர்ந்தது போல் மலைநாட்டிலிருந்து வந்த தலைவன் குறவர் குலத்திற் பிறந்த என்னைக் கூடிக் கலந்து இன்பம் நுகர்ந்தான் என்று உள்ளுறை கொள்க. முசு என்பது குரங்கின் ஒருவகைச் சாதி. கருங்குரங்கு எனவும் கூறுவர். கொளீஇய என்பது கொள்வித்த என்ற பொருளில் வந்தது. பலவின் கனிக்குப் பல அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தது, உயர்ந்த சிறந்த ஓர் குடியிற் றோன்றி இன்பந்தரத் தக்க கன்னி எனத் தன்னையுயர்த்திக் கூறியதாம். மாவின் முசு என்றது வேறொரு குடியிற் பிறந்து வந்த தலைவன் எனக் கூறியதாம். தெளித்து என்றது இயற்கைப் புணர்ச்சியின் நின்னிற் பிரியேன்
|