கடுமையான சூளுரைக்கும்போது நோக்கிக் கானலுள் மேய்ந்திருந்த; தடம் தாள் மடம் நாராய் கேள் - பெரிய கால்களையும் இளமைப் பருவத்தையுமுடைய நாரையே நான் உன்னிடமே கூறுகின்றேன் நீயே கேட்பாய். (என்று தலைவி புலம்பினாள்). (வி-ம்.) தலைவி, தலைவன் பிரிவாற்றாமையாற் கடலைச்சார்ந்த கழிக்கரையிலுள்ள பொருள்களை விளித்துக் கூறுவது, காமமிக்க கழிபடர் கிளவியென்ற துறையாம். சேர்ப்ப என்றவிளி - தலைவனைக் குறித்ததன்று. கடற்கரையை அல்லது கடற்றுறையை விளித்ததாகக்கொள்க. சேர்ப்பு என்பது கடற்றுறையின் பெயர். அன்விகுதி சேர்ந்து சேர்ப்பன் என்றாகிப் பின் விளியாயிற்று. துறையாகிய ஆண்மகனே என்பது பொருள். ‘’செந்தார்ப் பசுங்கிளியார்’’ என்று கிளியை கிளியாகிய பெரியார் என்று விளித்ததுபோலக் கொள்க. உயர்வுபற்றி வந்த வழுவமைதியிது. முதலிற் கடற்றுறையைக் கண்டாள் விளித்தாள்; பின் கருதினாள்’ கடற்றுறை காதலனோடு முதலிற் கூடிய இயற்கைப் புணர்ச்சியை யறியாது என்று; அதனால் ‘‘நின்னோடுரையேன்’’ என்றாள். பின்னர் அன்றிலும் அறியாது எனக்கருதி அன்றிற்குஞ்சொல்லேன்’’ என்றாள். காதலன் கடுஞ்சூளுரைத்துப் புணர்ந்து பிரியுங்காலத்து நாரைகானலுள் மேய்ந்தது நினைவிற்கு வந்தது; அதனால் ‘’மடநாராய்’’ என விளித்து நீயே சான்றாய் நின்றாய் என்ற குறிப்புங் கூறிக்கேள் என்று பிரிவாற்றாமை கூறத்தொடங்கினள் எனக்கொள்க. ‘’குருகுமுண்டுதாம் மணந்தஞான்றே’’ என்று இயற்கைப் புணர்ச்சிக்குச் சான்று குருகினைக் கூறுவதும் காண்க. கடுஞ்சூள் கூறியது உனக்கே தெரியும்; ஒருவரும் அறியார். என் காதலர் இவ்வாறு சூளுரைத்தவர் பிரிவது நன்றா? நீயே அவர்க்குக் கூறுக என்பது குறிப்பு. (இ-பு.) சேர்ப்ப என்பது திணைவழுவமைதி. நெடுங்கடல்: பண்புத்தொகை. உரையேன் சொல்லேன் என்பன தன்மை யொருமை எதிர்மறை வினைமுற்றுக்கள். கடுஞ்சூள், தடம்தாள்,
|