என் உடல் மெலிந்து பசலைபூத்து அழகு குலைந்தது என்ற குறிப்புத்தோன்ற ‘’அணிநலம் உண்டு இறந்து’’ என்றாள். ஒருகாலத்திற் பிரியினும் காதலர் அடுத்து வந்து கூடிக்கலந்து அன்புடன் வாழ்ந்திருக்கக்கருதுவது இயற்கை. என் காதலரே எனக்கு அருள் புரியாது நெடிது நாளாக மறந்து மனத் துணிவாகத் தங்கினர் என்பது வெளிப்பட ‘’நம்மருளாவிட்ட துணிமுந்நீர்ச் சேர்ப்பதற்கு’’ என்றாள். சேர்ப்பன் விடுத்த தூது போல் முன்னர்த்தலைவன் என்னைக் களவிற் புணர்ந்து கடுஞ் சூளுரைத்துத் தேற்றிப்பிரியும் காலத்து நீ தாழ்ந்த குரலுடன் கானலில் - வந்து தனித்திருந்தாயன்றோ? உன்னையன்றி எனக்கு உதவிபுரிவார் யாவர் நீ பறந்து சென்றழைத்துவா என்ற கருத்துத் தோன்ற ‘’தூதோடு வந்த... பற" என்றாள். (இ-பு.) மணிநிறம்: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. ஆய் - ஆகி செய்து என்ற வாய்பாட்டு வினையெச்சம். போய் என்பது போல் யகர மெய் விகுதி. அருளா: ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்சம். துணி சேர்ப்பற்கு எனக் கூட்டுக வினைத்தொகை. பற: ஏவலொருமை வினைமுற்று. இதுவும் அது 52. அன்னையு மில் கடிந்தாள் யாங்கினியா மென் செய்கம் புன்னையங் கானலுட் புக்கருந்தும் - நின்னை நினையான் றுறந்த நெடுங்கழீச் சேர்ப்பற் குரையேனோ பட்ட பழி. (சொ-ள்.) (நாரையே) அன்னையும் இல் கடிந்தாள் - என் தாயும் மனையினின்று நீக்கத் தக்க சொற்கள் பேசுகின்றாள்; யாங்கு இனி யாம் என் செய்கம் - இனிமேல் எவ்விடம் சென்று நாம் என்ன செய்வோம்; புன்னை அம்கானலுள் புக்கு அருந்தும் நின்னை - புன்னை மரங்களையுடைய அழகிய கழிக்கரையிற் புகுந்து மீனுண்டு நோக்கியிருந்த உன்னையும்; நினையான் துறந்த நெடுங்கழிசேர்ப்பற்கு - நினையாமல் பிரிந்து சென்ற நீண்ட கழிக்கரையையுடைய நெய்தனிலத் தலைவனுக்கு:
|