பட்டபழி உரையேனோ - யான் அடைந்த பழிச்சொல்லுடன் கூடிய துன்பத்தைக்கூறுவேனோ; (கூறாதேயிறந்து படுவேனோ யானறியேன் என்றாள்). (வி-ம்.) முந்திய கவியில் வந்த நாரையை நோக்கிக்கூறியதாகக் கொள்க. நாரையே! என விளிவருவித்துக் கொள்க. கடிந்தாள் என்பது கடிவாள் என்ற சொல்லை யிறந்தகாலத்தாற் கூறியதாகக் கொள்க. துணிவு பற்றி வந்த காலவழுவமைதி. யாங்கு - எவ்விடம். அன்னையாற் கடியப்பட்டபின் எங்குச் சென்று யாது செய்து வாழ்வோம், வாழ வழி யொன்று மின்று என்ற கருத்து விளங்க ‘’யாங்கு இனியாம் என் செய்கம்’’ என்றாள். யாம் என்றது, தன்னைப் பன்மையாகக் கூறியது. இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த போது தலைவன் ‘’நின்னைப் பிரியேன்; பிரியுனும் உயிர்தரியேன்’’ என்று கூறிச் சூள் புரிந்த போது சான்றாக நீ தானே நின்றாய். வேறு சான்றில்லையே! நானும் தலைவனும் நீ மீனுண்ணும் காட்சியை நோக்கி வியந்திருந்தோமே! என்னைத் தலைவன் மறப்பினும் உன் காட்சி அவர் கண்ணைவிட் டகலாதே. உன் நினைவு வரினும் என்னையும் நினைக்க ஏதுவாகுமே! அந்நினைவையும் மறந்தார் போலும் என்ற கருத்தினால் ‘’நின்னை நினையான் துறந்த’’ என்றாள். நினையான் என்பது நினையாமல் எனப்பொருள் பட்டது. தலைவன் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதல் அன்னையர் கூறும் பழிச்சொல்லும் ஊராருரைக்கும் பழிச்சொல்லும் இவற்றைக்கேட்டு நான் படும்பாடும் நேரிற்கூறுவதற்கு வருவானென எதிர் நோக்குகின்றேன். வரு முன்னரே பிரிவாற்றாமைத் துயரால் இறந்து படுவேனோ என்னும் ஐயமும் எழுகின்றது. இறந்து பட்டால் நான் பட்ட துயரத்தை என் தலைவனுக்குக் கூறுவார்யார்? இத்தனைத்துன் பங்களும் நம்பொருட்டால் அடைந்து உயிர்வைத்திருந்தாள் என்று என் தலைவன் அறிந்தாலும் என்னுள்ளம் சிறிது ஆறுதலடையும். அதுவுமின்றி இறந்துபட்டாற் பயனில்லையே என்று வருந்துகின்றேன் என்ற குறிப்புத் தோன்ற ‘’உரையேனோ பட்ட பழி’’ என்றாள். பட்ட பழியுரைத்துப்பின் இறந்தாள் பயனுண்டு என்பது கருத்து.
|