பக்கம் எண் :

56

நெய்தனிலத்தலைவனை (நம் தலைவனை) யாம் காணும் ஆறு என்னைகொல் - நாம் இனிக்காணும் வழியாது (அதனை யாய்ந்து கூறுக என்றாள்).

(வி-ம்.) யாம் என்றது தன்னாருயிர்த் தோழியையுளப்படுத்திக் கூறியதாகக் கொள்க. நம் காதலரை முன் கண்டிலோம். இவர் அவ்வழி வருவாரென்று எதிர் நோக்கி யிருந்திலேம். சிறுமியராகத் தந்தையர் தன்னையர் கொண்டு வந்து தந்த இறால் மீன்களை அவர்கள் ஆணைப்படி உணக்கிப் புள்ளினங்களை யோட்டியிருந்தோம். காதலறியாத சிறுமியர்யாம் என்ற கருத்து அடங்க ‘’என்னையர் ........இருந்தேம்" என்றாள். வஞ்சித்து என்னைமயக்கி இனிய சொல்லும் சூளுரையும் இயம்பிக் கனவிற் புணர்ந்து இன்பம் நுகர்ந்தான் என்பது தோன்ற பொய்த்து......’’ நலனுண்டசேர்ப்பன்’’ என்றாள். என்னை மட்டும் வஞ்சித்தானல்லன் உன்னையும் வஞ்சித்தான்நீயும் அவனுரை கேட்டு மயங்கி என்னை அவனோடு கூட்டுவித்தாய் என்பாள் ‘’பொய்த்து எம்மை’’ என்றாள். நலன் உண்ட சேர்ப்பன் என்பது இன்பத்தை நுகர்ந்த தலைவன் என்று பொருள் தருவதும் அன்றி அவன் என்னை விட்டுப் பிரிந்ததனால் என் மேனி பசலை பூத்து எழில் குலைந்து நலமுழுவதும் தொலைவதற்குக் காரணமானவன் என்ற பொருளும் தொனிக்கின்றது. நலன் உண்ட சேர்ப்பன் - என் எழிலைக் குலைத்த தலைவன் என்றும் பொருள் படும். வஞ்ச நெஞ்சமுடைய தலைவனாதலால் அவனை யாம் காண்பது அரிது; சூழ்ச்சியாற் காணல் கூடும்; அதற்குரிய சூழ்ச்சியாய்ந்து கூறுக என்பாள் போல ‘’என்னை கொல்’’ என்றாள். தலைவனைக் கண்டாலும் என் ஆற்றாமை நீங்கும்; அதற்குரியது செய் என்பது குறிப்பு.

(இ-பு.) எம்மைப் பொய்த்து: உருபு மயக்கம். நான்கனுருபு நிற்க வேண்டிய இடத்தில் இரண்டனுருபு நின்றது. இருந்தேம் : தன்மைப் பன்மை வினைமுற்று. கொல்: ஐயப்பொருள் தந்தது; இறவுணங்கல்: இருபெயரொட்டு.