பக்கம் எண் :

57

பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது

55. கொக்கார் கொடுங் கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்
நக்காங் கசதி தனியாடித் - தக்க
பொருகயற் கண்ணினாய் புல்லான் விடினே
இருகையும் நில்லா வளை.

(சொ-ள்.) கொக்கு ஆர் கொடு கழி கூடு நீர்தண் சேர்ப்பன் - கொக்கு என்ற பறவைகள் நிறைந்த வளைந்த கழி நிலங்கள் கூடிய குளிர்ந்த நீர்க்கரையையுடைய தலைவன்; நக்கு ஆங்கு அசதியாடிப் புல்லான் விடின் - என்னை நோக்கிச் சிரித்து விளையாட்டாகப் பேசித் தழுவிப் புணராதிருப்பானாயின்; இரு கையும் வளைநில்லா - என் இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் ஒன்றும் நில்லாமல் கழன்று விழும்; தக்க பொருகயல் கண்ணினாய் - எனக்குத் தகுதியான பிறழுங்கொண்டை மீன் போன்ற கண்களையுடைய பாங்கியே! (என்றாள் தலைவி).

(வி-ம்.) பாங்கியே நீ அவன் புறத்தொழுக்க முடையவன் என்றும், என்னைப் பிரிந்து நெடிது நாள் மறந்து நினையாமற் பரத்தையார் சேரியிற் பயின்று திரிந்தான் எனவும் பழிக்கின்றாய். நீ கூறுவதனைத்தும் உண்மையே! ஆயினும் அவன் என்மேல் வைத்திருக்கும் அன்பு உனக்குத் தோன்றாது எத்தனை பிழை புரியினும் அத்தனையும் தோன்றாது என் தலைவன் அன்பே என் நெஞ்சில் நிற்கும்; என்னுடன் முகமலர்ந்து நகைத்து விளையாடி என்னைக் கூடாதபோது என் உடல் மெலிந்து நலிந்து வளையல்களும் கீழேகழன்று விழும் - புணர்ந்த போது உடல் புளக முற்றுப் பூரிக்கும்; நான் அவனின்றி உயிர் வாழும் நிலைமையரிது என்று தலைவன் அன்பைத்தலைவி தன் தோழிக்குக் கூறியது இது. தக்க தலைவனுடன் தன்னை முன் கூட்டுவித்தது கருதி எனக்குத் தகுதியான பாங்கி நீயே என்பது தோன்ற ‘’தக்க’’ என்ற அடைமொழி புணர்க்கப்பட்டது. மீன்களையுண்பது கருதிக்கொக்குகள் நிறைந்திருக்கும் கழிநிலம் போல என் தலைவன் இன்பத்தை நுகர்வதற்குப் பரத்தையர் சேரியுள்ளது. என்ற குறிப்புத் தோன்றுவது காண்க. பரத்தையர்