சேரியினின்று வரினும் அவன் பிழையை எண்ணாமல் அவனுடன் கலப்பதற்கே என் நெஞ்சு விழைகின்றது என்றாள். ‘’பன்மாயக் கள்வன் பணிமொழியன்றோ நம் பெண்மையுடைக்கும் படை’’ என்ற குறட் கருத்தையும் ஒப்பு நோக்குக. (இ-பு.) பொருகயல், ஆர்கழி, கூடுநீர் இவை வினைத்தொகைகள். கொடுங்கழி, தண்சேர்ப்பன் இவை பண்புத்தொகைகள். புல்லான்: முற்றெச்சம். இருகையும் - உம். முற்று. நில்லா: அஃறிணைப் பலவின் பால் எதிர்மறை வினைமுற்று.
வரைபொருட் பிரிவு நீட்டித்தவழித் தலைவி தோழிக்குக் கூறியது 56. நுரைதரு மோதங் கடந்தெமர் தந்த கருங்கரை வன்மீன் கவரும்புள் ளோப்பிற் புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன் நுகர்வன னுண்டா னலம். (சொ-ள்.) தோழீ! நுரைதரும் ஓதம் கடந்து எமர் கருங்கரை தந்த - நுரையோடு வரும் கடல் அலைகளைக் கடந்து சென்று நம்மவர் பெரிய கரைக்குக் கொண்டுவந்து தந்த; வன்மீன் கவரும் புள் ஓப்பில் - வலியமீன் உணங்கலைக் கவரும் பறவை யினங்களையோட்டுஞ் செயலில்; புகர் இல்லேம் யாம் இருப்ப - ஒரு குற்றமும் இல்லாதவர்களாய் நாம் ஆங்கிருந்த போது; பூகழி சேர்ப்பன் நலம் நுகர்வனன் உண்டான் - பொலிவாகிய கழிக்கரையுடைய நெய்தனிலத் தலைவன் (நம் தலைவன்) வந்து நம் இன்பத்தை நுகர்ந்து அடைந்தான்; (அதனை மறந்தனன் போலும் என்றாள்.) (வி-ம்.) நம் தலைவனை நாம் முதலில் அறிந்தோமா? அவன் அழகைக் கண்டு காதல் கொண்டோமா? மணஞ்செய்து கொள்ளென்று வேண்டினோமா? ஒன்றும் புரியாது மீனுணங் கலைக் காத்திருந்தோம் நாம்; அவ்வாறிருந்த நம்மை முதலிற் கண்டு காதல்கொண்டு குறையிரந்து மணஞ்செய்வேன்; பிரியேன்; பிரியினும் தரியேன் என்று சூளுரைத்து நம்மை மயக்கிக் கலந்த செயல் அவன் பிழையே; நம் பிழையன்று என்பாள் ‘’புகரில்லேம் யாம் இருப்ப’’ என்றாள். பூகழி - அழகிய
|