பக்கம் எண் :

60

சுற்றத்தை யழைக்கும் (அது கண்டு நாம் இரவுக் குறிவயிற் செல்லவேண்டும் என்றாள் தோழி.)

(வி-ம்.) தலைவன் கழிக்கரை கடந்து நம் முன்றில் வந்து நின்று அடுத்துள்ள புலால் நாற்றமுடைய நீரில் அலையெழுப்புவான்; அவ்வோசை கேட்டு அடுத்துள்ள பனை மரத்தில் அன்றிற் பறவைகள் கத்தும்; இவ்விரண்டு குறிகளுங்கண்டு நாம் இரவிற் குறியிடம் செல்லவேண்டும். தலைவன் இரவுக் குறி வேண்டினன்; இன்று வருவான் என்று தலைவிக்குத் தோழி கூறியதாகக் கொள்க. நிலவு என்பது உவமையாகு பெயரால் மணலையுணர்த்தியதாகக் கொள்க. நிலவு நிலைபெற்ற என்ற பொருளையும் தரும். நிலைபெற்ற வளை வாகிய கழிக்கரை என்று கொள்க. அன்றிற் பறவைகள் இரவில் உறங்கும் போதும் ஆணும் பெண்ணும் பிரியாது ஒன்றோடொன்று கழுத்திற் கழுத்தைப் பொருத்தியுறங்கும் எனவும், சிறிது விலகினும் கத்தும் எனவும் கூறுவர். அவ்வியற்கை தோன்ற ‘’கொடுவாய்ப் புணரன்றில்’’ என்றார். பனை மடல்கள் ஒவ்வொன்றாக அடியிலிருந்து வெட்டப்படுவதால் ‘’கொய்மடல்’’ என்றார். தடவு என்பது பெருமையைக் குறிக்கும். ஆதலால் பெருகிய கிளை என்று பொருள் கூறப்பட்டது. பயிரல் - பறவை கத்துதல்.

(இ-பு.) கொடுவாய், புணரன்றில், கொய்மடல் வினைத்தொகைகள். தடவுக்கிளை தண்கடல் பண்புத் தொகைகள் கோடும் என்பது குறுகி, கொடும் என நின்றது. குறுக்கல் விகாரம்.

தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்

58. சுறாவெறி குப்பை சுழலுங் கழியுள்
இறாவெறி யோத மலற விரைக்கும்
உறாஅநீர்ச் சேர்ப்பனை யுள்ளி யிருப்பிற்
பொறா அவென் முன்கை வளை

(சொ-ள்.) தோழி! சுறா எறிகுப்பை சுழலும் சுழியுள் - மகர மீனால் மோதி யடிக்கப்பட்ட மீன்குவியல் சுழல்கின்ற கழிநிலத்தில்; இறா எறி ஓதம் அலற இரைக்கும் - இறவு மீன்களை வீசியெறியும்