துளைக்கப்பட்டிருக்கும். அது கண்ணாற் கூர்ந்து வெளியில் நிற்பவரைக் காணவும் உள்ளிருப்பவரைப் பார்க்கவும் உதவியாகும். புழையும் அடைத்தாள் எனவே நீயும் தலைவனும் கண்ணால் நோக்குவதும் இயலாது எனக் குறிப்பிற் கூறியதாம். "மடமகன் யார்" எனச் செவிலி பழித்ததாகக் கூறியது அறியாமையால் களவொழுக்கத்தை இன்னும் விரும்புகின்றாய். உன்னை அறிவிலி என்று செவிலியும் பழிக்கின்றாள் என்று தலைமகனுக்கு அறுவுறுத்திற்று. நூழை - சிறுவாயில் - புறக்கடை வாயில். அதன் வழி தலைவன் இரவில் வந்து கூடிக் கலந்து பிரிவது இயற்கை. அதனையறிந்த தோழி இவ்வாறு படைத்து மொழிந்தனள். (இ-பு.) குருகு உவமையாகுபெயராய்த் தாழைமலரை யுணர்த்தியது. மாழை - மா. இது வடுவினையுணர்த்தியது; ஆகுபெயர். கொல் ஐயப் பொருள் தந்தது. புழையும் - உம் எச்சப் பொருளில் வந்தது. வினைமுற்றி மீண்டதலைமகன் வரவுகண்ட தோழி தலைவிக்குக் கூறியது 60. பொன்னம் பசலையுந் தீர்ந்தது பூங்கொடி தென்னவன் கொற்கைக் குருகிரிய - மன்னரை யோடுபுறங்கண்ட வொண்டாரான் றேரிதோ கூடலணைய வரவு. (சொ-ள்.) பூங்கெடி - மலர்மலர்ந்த கொடிபோன்ற தலைவியே! மன்னரை ஓடுபுறம் கண்ட ஒண் தாரான் தேர் - பகை மன்னர் அஞ்சியோடுமாறு வென்று புறங்கண்ட ஒளி பொருந்திய பூமாலை புனைந்தவன் தேரானது; தென்னவன் கொற்கை குருகு இரிய - பாண்டிய மன்னன் கொற்கைத் துறைமேயும் குருகினங்களெல்லாம் இரிந்தோடும்படி, கூடல் அணைய வரவு தேர் இதோ - மதுரையை நெருங்க வந்தது தேர் இதோ காண்; பொன் அம் பசலையும் தீர்ந்தது - பொன் போன்ற அழகிய பசலை நோயும் இனி நீங்கிவிடும். (வருந்தாதே என்றாள்).
|