பக்கம் எண் :

64

(வி-ம்.) தென்னவனுக்குப் படைத்துணையாகச் சென்றவன் இத்தலைவன் என்று கொள்க. விரைவாகத் தேர்வருகின்றது. அவ்வொலி கேட்டுக் கொற்கைத் துறை மேய்ந்த புள்ளினங்கள் எல்லாம் பறந்தோடியது. என்று அதன் விரைவைத் தலைவிக்குக் குறிப்பாற் கூறினள். மதுரையை நெருங்க வருகின்றது. இனி நம்மனைக்கு வந்துவிடும். இதோபார் என்று ஒரு மணல் மேட்டினின்று சுட்டிக் காட்டியதாகக் கொள்க. இனிப் பசலையும் தீரும் என்று கூறவேண்டியதை, தீர்ந்தது எனத் துணிவாற் கூறினள். பொன் - பசலை நிறத்துக்கு உவமை. புறங்கண்டபின் புனைந்த வெற்றித்தார் என்பது தோன்ற ‘’ஒண்டாரான்’’ என்றாள். வினைமுற்றி வெற்றிமாலை புனைந்து வருகின்றான் நம்தலைவன் என மகிழ்ச்சியூட்டினள் தலைவிக்கு. இதோ என்ற சொல்லுக்கு பார் என்ற சொல் வருவித்துக் கொள்க. கூடல் அனைய என்ற பாடத்திற்கு மதுரை போல் இன்பத்தைத்தரும் அவனுடைய வரவு எனப்பொருள் கொள்க. பூங்கொடி, தாரான்தேர், குருகிரிய, கூடல் அணைய, வரவு, இதோ பார் எனக் கூட்டுக.

(இ-பு.) பசலையும் - இதில் உம்மை பிரிவாற்றாமைத் துன்பந் தீர்ந்ததும் அன்றி என்று பொருள் படலால் எச்சவும்மை. பூங்கொடி: உவமையாகுபெயர். தீர்ந்தது: கால வழுவமைதி. வரவு: தொழிற்பெயர். பொன்னம்பசலை: உவமைத்தொகை. பின்னது பண்புத்தொகை. ஓடுபுறம்: வினைத்தொகை.