பக்கம் எண் :

8

(வி-ம்.) உகளும்என்ற பெயரெச்சம் இரண்டும் மலைநாடன் என்ற பெயர் கொண்டு முடிந்தன. மரையா உகள்வது மலையில் என்றும் மந்தியுகள்வது சோலையில் என்றும் உணர்ந்துகொள்க. குரங்கு அறிவினுஞ் செயலினும் விலங்குகளி னுயர்ந்தது என்று புகழப்படுவதால் உரைசால் என அடைகொடுத்தார் : மனிதர் செய்யுஞ் செயல் பலவுங் கண்டு அவ்வாறே புரியத் தொடங்குவது குரங்கின் இயற்கை என்பதும் அறிக. தலைவனோடு கூடிக் கலந்த இன்பத்தை என் நெஞ்சு விழைகின்றது. அவ்விழைவாற் காதல் கொண்டு கலங்குகின்றேன் என்ற குறிப்புத் தோன்ற ‘’அகலம் உரையாவழங்கும் என்னெஞ்சு’’ என்றாள். என் நெஞ்சைத் தேய்க்கின்றது அவன் மார்பு, அன்றியும் அதனுள் அடிக்கடி பழகி நடக்கின்றது; அதனால் என்நெஞ்சு புண்ணாகி வருத்தமுறுகின்றேன். என் நெஞ்சு மெலிது; அவன் மார்போ கல்லினும் வலிது; அதனோடு பல பூண்களும் அணியப் பட்டது; அடிக்கடி வந்து நடக்கின்றது; தேய்க்கின்றது; எவ்வாறு ஆற்றுவேன்; ஆற்றாமையாற் புலம்புகின்றேன் என்ற குறிப்புக் காண்க. உழக்கும் என்ற பாடத்திற்கு மிதித்துக் கலக்குகின்றது என்று பொருள் கொள்க. மார்பு, மாதர் நினைக்கும் சிறந்த உறுப்பு; கொங்கை ஆடவர் நினைக்கும் சிறந்த உறுப்பு என அறிக, மலைநாட்டில் மரையாவும் மந்தியும் உகள்வது போல அவன் மார்பு என்னெஞ்சில் உகள்கின்றது என்ற குறிப்புத் தோன்றுதல் காண்க. உரைத்தல் - தேய்த்தல்.

(இ-பு.) பயில் சோலை: வினைத்தொகை. தீர்மலைநாடன் என்பதும் அது. உரையா: செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; உரைத்து எனக்கொள்க. உரையா வழங்கும் என வினைமுடிவு செய்க. அகலம் என்பது எழுவாய். நெஞ்சு என்பதில் இரண்டனுருபு தொக்கது. நெஞ்சினை உரையா அதில் வழங்கும் எனக் கூட்டுக.

இச் செய்யுள் தலைவி கூற்று நிகழுமிடத்து மறையாது வாய்விட்டுக் கூறி அழுங்குதலாகிய ‘’விட்டுயிர்த்தழுங்கல்’’ என்பதற்கு மேற்கோள் தொல். கள. சூத். 21. இளம். ‘’உழக்கும்’’ என்ற பாடமும் அவ்வுரையிற்கண்டதுவே.