இதுவு மது 7. கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை யெல்லுறு போழ்தி னினிய பழங்கவுட்கொண் டொல்லென வோடு மலைநாடன் றன் கேண்மை சொல்லச் சொரியும் வளை. (சொ-ள்.) கடுவன் கல்வரை ஏறி - ஆண்குரங்குகள் பல கற்களையுடைய மலையில் ஏறி; எல் உறு போழ்தின் - சூரியன் பொருந்திய பகற்காலத்தில்; வாழை கனி இனிய பழம் கவுள் கொண்டு - அங்குள்ள, வாழை மரத்திற் கனிந்த பழத்தைப் பறித்து உரித்துக் கன்னத்தில் ஒதுக்கிக் கொண்டு; ஒல்லென ஓடு மலைநாடன் தன் கேண்மை - விரைவாக ஓடுகின்ற வளம் பொருந்திய மலைநாடனாகிய நம் தலைவனது நட்பின் இயல்பினைப் பற்றி; சொல்ல வளை சொரியும் - கூறத் தொடங்கினால் அப்போதே என் கைவளையல்கள் கழன்று விழும், (என்று கூறினள்). (வி-ம்.) ஆண் குரங்குகள் வாழைக் கனிகளைப் பகற்காலத்திற் பறித்து உரித்துக் கன்னத்திலொதுக்கி விரைந்தோடும் மலைவளமுடைய தலைவன் ஆதலால் அவன் செயலும் அது போலவே யிருக்கின்றது என்று குறிப்பிற் கூறினள். தினைப் புனத்திலேறி அங்கிருந்த என்னைக் களவிற் புணர்ந்து இன்பந்துய்த்து விரைவில் நீங்கினான் என்பது குறிப்பு. அவ்வாறு பிரிந்த தலைவனியல்பை நான் சொல்லக் கருதியபோதே என் வளையல்கள் கழல்கின்றன என்பது உடல் மெலிகின்றது என்பதையுணர்த்தியதாகக் கொள்க. சொல் என்பதற்கு நீ கூற என்று பொருள் கொண்டு தோழி இயற்பட மொழிந்தனள் என்றும் அது குறித்துத் தலைவி இயற் பழித்துரைத்தனள் என்றும் பொருள் கூறலாம். அவ்வாறு கூறினும் தொல். கள. சூத். 21 பிரிந்த வழிக்கலங்கினும் என்பதின் கண்ணே அடங்கும் என்று அறிக. (இ-பு.) கல்வரை: இரண்டனுருபும் பயனும் தொக்க தொகை. கவுட்கொண்டு: ஏழாம் வேற்றுமைத் தொகை.
|