திருக்குறள் 332 இலும் கூத்தாட்டு, கூத்தாடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. கூத்தாகிய ஆடல் எனின் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, களி -கள்ளுண்ணுதலால் ஏற்படும் வெறி; இதையுடையவன் களியெனப் படுவான். விளியாதான், களியாதான், தெளியாதான் : வினையாலணையும் பெயர்கள். உரை : முதனிலைத் தொழிற்பெயர். பல்காலும், உம் : முற்றுப் பொருளானது. நோவது - நோவதற்கு ஏதுவானது; நோ : பகுதி முதல் நீண்டது. அ : சாரியை, து : ஒன்றன்பால் விகுதி, இம் மூன்றும் உடைத்து என்பது பன்மையில் ஒருமை மயக்கம். ஊர் : இடவாகு பெயர். விளியாதான். கூத்தாட்டுக் காண்டல் என்பதற்கு இனிமையாகப் பாடாதவன் கூத்தாட்டத்தைச் செய்தலும் என்றும் கூறலாம். விளித்தல் - ஒலித்தல், ஈண்டுப் பாடலின் மேற்று. காண்டல் - செய்தல்; "முனைவன் கண்டது முதனூல்" என்பதிற் காண்க. கூரை : சினையாகு பெயராய் வீட்டையுணர்த்திற்று. (11) 12. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. (இ-ள்.) தாள் ஆளன் என்பான் - முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா - கடன் படாமல், வாழ்பவன் - வாழ்தலுடையவன், வேள் ஆளன் - உதவி யாளன், என்பான் - என்று சொல்லப்படுவோன், விருந்து - வந்த விருந்தினர், இருக்க - பசித்து இருக்கையில், உண்ணாதான்- (தனித்து) உண்ணாதவன், கோள் ஆளான் - (பிறர் அறிந்த காரியங்களை மனத்திற்) கொள்ளுதல் உடையவன், என்பான் - என்று சொல்லப்படுபவன், மறவாதான் - கேட்டவற்றை மறவாதவன், இ மூவர் - இம் மூவரும், கேள் ஆக - தனக்கு நட்பினராயிருக்க, வாழ்தல் - (ஒருவன்) வாழ்வது, இனிது - (அவனுக்கு) நன்மை தருவதாகும்; (எ-று.) (க-ரை.) கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி யென்பதும் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி என்பதும், தான் ஒருவர் சொல்லியவற்றை மறவாது மனத்திற் கொண்டிருத்தலே நற்சிந்தை என்பதும் ஆம். தாள் - முயற்சி, வேள் - உதவி, என்பான் - என்று சொல்லப் படுபவன் : செயப்பாட்டுவினை செய்வினையாக வந்த வினையாலணை
|