மாண், பகுதி; மாண்ட : பெயரெச்சம். தவசி : காரணப் பெயர். தவசு : பகுதி. தவமாவது - மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்கல் முதலாயின. அரியார் என்பதில் அருமை என்னும் பகுதி இன்மை யென்னும் பொருட்டு. (13) 14. இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். (இ-ள்.) இளமை - இளமைப் பருவம், இழுக்கல் - வழுவுதலை, இயல்பிற்று - இயல்பாகவுடையது; பேதைமை - அறியாமை, பழித்தவை - (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் - சொல்லுதலில், வற்று ஆகும் - வல்லதாம், சிறுமை - ஈனத்தன்மை, யாண்டும் - எக்காலத்தும் செறுவொடு - சினத்தோடு, நிற்கும் - நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் - இம் மூவகையினையும், அறிவு உடையார் - (மேல் விளைவை) அறிதலையுடையார், குறுகார் - நெருங்கார்; (எ-று.) (க-ரை.) இயல்பாக வழுவுதலையுடையது இளமைப்பருவமாம்; வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர்அவனைச் சேரார். இழுக்கல் - வழக்குதல்; இழுக்கு : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி, இயல்பிற்று : குறிப்பு முற்று. இயல்பு ; பகுதி, இன் : சாரியை. று : விகுதி. னகரம் றகரமாகத் திரிந்தது. பழித்தவை : பலவின்பால் வினையாலணையும் பெயர். வற்று : வன்மையின் திரிபாகிய வல் : பகுதி. று : ஒன்றன்பால் விகுதி, லகரம் றகரமானது சந்தி. செறுவொடு : ஒடு என்னும் மூன்றனுருபு விசேடணப் பொருளது. சிறுமையுடன் செறுவும் உடனிகழ்தலால், உடனிகழ்ச்சிப்பொருளுமாம், இளமை, பேதைமை, சிறுமைகள் அவற்றையுடையார்க்குப் பண்பாகு பெயரென்றாயினும், இழிவுபற்றி உயர்திணையை அஃறிணையாகக் கூறியதென்றாயினும் அமைத்துக்கொள்க. (14) 15. பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா; நட்கப் படாஅ தவர்.
|