20. ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலும் இம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (இ-ள்.) பிறன்கண் - பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் - விருப்பத்தைச் செய்தலும், பாசம் - தன் சுற்றத்தார், பசிப்ப - பசித்திருக்க, மடியை - சோம்பலை, கொளலும் - கொள்ளுதலும்; கதித்து - வெறுத்து, ஒருவன் - ஒருவனால், கல்லான் என்று - கற்றிலன் என்று, எள்ளப்படுதலும் - இகழப்படுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், எல்லார்க்கும் - யாவர்க்கும், இன்னாதன - இன்பந் தராதவைகளாம்; (எ-று.) (க-ரை.) அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், மக்கள் முதலிய கிளைஞர் உணவின்றி வருந்த யாதொரு முயற்சியுமின்றிச் சும்மா இருப்பதும், கல்லாதவன் என்றிகழப்படுவதும் இன்பந்தராதவை. பிறன் என்பது அவன் பொருளுக்கு ஆகுபெயர். இனி, பிறன்கண் ஆசைப்படுதலும் என்பதற்குத் தீயோனிடத்துச் செல்வம் உண்டாதலும் என்றுங் கூறலாம். இங்கு நல்லோனுக்கு மறுதலைப்பட்டவனைப் பிறன் என்றார். பாசம் : கயிற்றின் பெயராகிய இஃது ஒருவனை நீங்கவொட்டாமற் கட்டுப்படுத்துகிறதென்னும் ஒப்புமையால் ஆசைக்கு ஆயிற்று. பின்பு ஆசைக்கு இடமாகிய சுற்றத்திற்கு ஆகுபெயர். கதித்து : கதம் என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். கதி : பகுதி, கதித்து என்பதற்குப் பெருத்து வளர்ந்து எனவும் பொருள் கூறுவர். ஒருவன் : கருத்தாப் பொருளில் வந்த மூன்றாம் வேற்றுமைத் தொகை. இன்னாதன : இனிமை என்னும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று. (20) 21. வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (இ-ள்.) வருவாயுள் - தமக்கு வரும் பொருள்களிலே, கால் - நான்கி லொரு பங்கு, வழங்கி - (அறத்திற்) செலவு செய்து,
|