நல்வினை - அறத்தினை பயனை, ஆர்க்கும் - (நீங்காதபடி) கட்டுகின்ற, கயிறு - கயிறாம், (எ-று.) (க-ரை.) தானங் கொடுத்தலாலும், மானங் கெடாத நல்லொழுக்கத்தாலும், பொருள் மேலே சிந்தனை யொழிந்திருப்பதனாலும் நல்வினைகளே மேன்மேலும் செய்யலாம். தானம் - அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல். தகைமை : பண்புப் பெயர். பொருள் நீங்கிய : பொருளின் நீங்கிய என்று ஐந்தனுருபு விரிக்க. வினையென்னும் காரணப் பெயர் தன் காரியமாகிய பயன்மேல் நின்றது. ஆர்க்கும் : எதிர்காலப் பெயரெச்சம்; ஆர் : பகுதி, உம் : விகுதி, கு : சாரியை, க் : சந்தி, குற்றம் : பண்புப் பெயர். கடிந்த : பெயரெச்சம்; கடி என்னும் உரிச்சொல் பகுதி. (23) 24. காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு. (இ-ள்.) காண் தகு - காணுதற்குத் தக்க, மென்தோள் - மெல்லிய தோள்களையுடைய, கணிகை - வேசையின், வாய் - வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் - இனிய மொழியும்; தூண்டிலினுள் - தூண்டிலினிடத்து, பொதிந்த - (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) வைக்கப்பட்ட, தேரையும் - தவளையும் : காழ்ந்த - வயிரம் பற்றிய, பகைவர் - பகைவர்களுடைய, மாண்ட - மாட்சிமைப்பட்ட, சீர் - சீரையுடைய, வணக்கமும் - வணக்கமும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் - (உயிர்களைத் தன்னுள்ளே) அழுந்தப் பண்ணுகின்ற, அளறு - நரகம் (போல்வனவாம்); (எ-று.) (க-ரை.) வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போ லிருந்து உள்ளே கவடு கொண்டிருத்தலால் நலமல்ல; ஆதலால் அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப்போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும். காண்தகு - காண்டகு, காண் : முதனிலைத் தொழிற்பெயர், நான்கனுருபு தொக்கதாகக் கொண்டு, காணுதற்கு என்று
|