பக்கம் எண் :

24

பொருள் சொல்லப்பட்டது. கணிகை - கணிக்கின்ற தன்மையிலிருப்பவள். அஃதாவது "செக்கூர்ந்து கொண்டாருஞ் சேர்ந்த பொருளுடையார், அக்காரம் அன்னார் அவர்க்கு" என்ற நாலடிச் செய்யுட்படி எவன் மிக்க பொருள் தருபவனென்று சிந்திக்கின்றவன் என்பதாம், வாய் என்று வேண்டாது கூறியது, பொருளுடையாரிடத்துக் கடுஞ்சொல் பயிலாமையைக் குறிக்கவேண்டியாம். தூண்டில் : தொழிலாகு பெயர் மீன்களை விரும்பத் தூண்டுவது. இனி, இல் : கருத்தாப் பொருள் விகுதியாகவுங் குறிக்கலாம். ஆழ்ச்சி - ஆழுதல் : தொழிற் பெயர். காழ்த்த : காழ் என்னும் பெயரடியாகப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். நரகம் போலுதலாவது அழிதற் கேதுவாய துன்பம் தருவது.

(24)

 25. செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.

(இ-ள்.) செருக்கினால் - (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் - வாழ்கின்ற, சிறியவனும் - அறிவில்லாதவனும்; பைத்து - படத்தைப் போன்றதாய், அகன்ற - விசாலமான, அல்குல் - நிதம்பத்தினை, விலைபகரும் - விற்கும், ஆய் தொடியும் - ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த வேசையும்; நல்லவர்க்கு - துறவறத்தார்க்கு, வைத்த - அமைத்த, அறப்புறம் - அறச்சாலையை, கொன்றானும் - அழித்தவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவருடைய, கைத்து - பொருளை, உண்ணார் - புசியார், கற்று - (அற நூல்களைப்) படித்து, அறிந்தார் - (அதன் பொருளை உள்ளபடி ) அறிந்தவர்; (எ-று.)

(க-ரை.) மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது என்பது.

செருக்கு. மதம், செல்வக் களிப்பு, ஆல் : மூன்றன் உருபு; உடனிகழ்ச்சிப் பொருள். சிறியவன் என்பதில் சிறுமை அறிவின் மேல் நின்றது. கொல்லல் - அழித்தல், "இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு" என்ற திருக்குறள் 1048 இல் கொன்றது என்பதற்கு இன்னாதவற்றைச்