செய்தல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. பைத்து - பையையுடையது. பை - படம். கைத்து - கையிலுள்ளது : ஒன்றன் பாற் படர்க்கை வினையாலணையும் பெயர், கை : பகுதி, த் : சந்தி, து : ஒன்றன்பால் விகுதி. "வஞ்சத்தாற் பல்கின்பங் காட்டும் பரத்தையும்" என்ற பாடங்கொள்வதும் உண்டு. (25) 26. ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானும் இம்மூவர் ஞால மெனப்படு வார். (இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் - அறியவல்ல, விருந்தினனும் - அதிதியும்; ஆர் உயிரை - அருமையாகிய உயிரை, கொல்வது - (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி - கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் - வாழ்கின்றவனும்; வல்லிதின் - (மனத்தின்) உறுதியினால், இனிது சீலம் - (உயிர்க்கு) நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை, உடைய ஆசானும் - உடைய ஆசிரியனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், ஞாலம் எனப்படுவார் - உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்; (எ-று.) (க-ரை.) பெற்றது கொண்டுமகிழும் அதிதியும், கொலையை நீக்கி வாழ்பவனும் உயிரினும் இனிய ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியனும் உயர்ந்தோர் என்று சொல்லப்படுவார் என்பது. ஒல்வது : தொழிலாகு பெயர். விருந்து - புதுமை. இப் பண்பு ஆகுபெயராய் விருந்தினனை யுணர்த்தும். விருந்தினன் - விருந்து : பகுதி, இன் : சாரியை, அன் : ஆண்பால் விகுதி. விருந்து - அறிவிருந்து அறியாவிருந்து என்றிரு வகைப்படும். முன் அறிந்திருந்தமையால் குறித்து வரும் விருந்து அறிவிருந்து; அறிந்திராமையால் குறியாமல் வரும் விருந்து அறியாவிருந்து. ஆருயிர் - ஆர்உயிர்; ஆர் - அருமை, ஆருயிர் : பண்புத்தொகை. அரு, இரு, பெரு முதலிய பண்புகள் வருமொழி முதலில் உயிர் வந்தால் முதல் நீளப் பெறும். கொல்வது : எதிர்காலத் தொழிற்பெயர், வல்லிது; வலிது என்பதன் விரித்தல் விகாரம் : குறிப்புவினையா லணையும் பெயர். ஆசான் - ஆசாரியன். ஞாலம் - உலகு : இங்கு ஆகுபெயராய் உலகத்து உயர்ந்தோரை உணர்த்தியது. (26)
|