நீங்குதலும், பால்பற்றிச் சொல்லாமையினால் பொய் முதலிய வாய்க்குற்றம் நீங்குதலும், சான்றாண்மை குன்றாமையினால் வஞ்சனை முதலிய மனக்குற்றம் நீங்குதலும் சொல்லப்பட்டன. (27) 28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர் உமிக்குத்திக் கைவரு ந்து வார். (இ-ள்.) வெல்வது - சொல்வென்றியை, வேண்டி - விரும்பி, வெகுண்டு உரைக்கும் - (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் - தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது - (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று - விரும்பி, இருப்பானும் - இருக்கின்றவனும்; கல்வி - பிறன் கற்ற கல்விப் பொருளில், செவிக் குற்றம் - செவியினால் குற்றத்தை, பார்த்திருப்பானும் - ஆராய்ந்து பார்க்கின்றவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், உமி குத்தி - உமியைக் குத்தி, கை வருந்துவார் - கைவருந்துவோரை ஒப்பர்; (எ-று.) (க-ரை.) வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லக் கருதுதலும், கிட்டாததைப் பெற முயலுதலும், ஒருவன் கல்வியின் தன்மையை ஆராயாது குற்றங் கூறுதலும்; உமியைக் குத்துபவர் போல் துன்பத்தையும் பயனின்மையையும் கொடுக்கும் என்பது. வெல்வது : எதிர்காலத் தொழிற்பெயர்; வெல் : பகுதி, வ் : இடைநிலை, அ : சாரியை, து : விகுதி, "வெல்வது வேண்டின் வெகுளி விடல்," என்பது நான்மணிக்கடிகை. வெகுண்டு : இறந்தகால வினையெச்சம். வெகுள் : பகுதி, ட் : இடைநிலை, உ : விகுதி, ளகரம் ணகரமானது விகாரம். நோன்பு - உயிர்க் குறுகண் செய்யாமை. "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு" என்றார் வள்ளுவரும். இலி - இல்லாதவன். உமிக்குத்தி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. ஒப்பர் என்னும் சொல் எஞ்சி நின்றது. (28) 29. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு.
|