பகைமை யுண்டாகிய காலத்திலும், அழுக்காறு - அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையை, இகந்தானும் - (கடந்தவனும்) நீங்கினவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும்; நின்ற புகழ் உடையார் - அழியாப் புகழுடையார்; (எ-று.) (க-ரை.) தன்னை மதித்து வந்தவரை இகழாமல் ஏற்றுக் கொள்வதும், செல்வம் சிறந்த காலத்தும் நண்பர் முதலியவர்களை மறவாமல் போற்றுவதும், பிறன் வாழ்வுக்கு மகிழ்வதும் புகழுக்குக் காரணமானவை என்பது. தன்நச்சி : இரண்டாம் வேற்றுமைத்தொகை. நச்சி - நச்சு : பகுதி. இ : வினையெச்ச விகுதி. எள்ளா - எள்ளாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மன்னிய : மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம். பொச்சாப்பு - பொச்சா : பகுதி, பு : தொழிற்பெயர் விகுதி; ப் : சந்தி - நீத்தான் : விணையாலணையும் பெயர் : நீ : பகுதி : அழுக்காறு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; அழுக்கறு; பகுதி. இகத்தல் - கடத்தல். இக : பகுதி. நின்ற - நிலைபெற்ற. (30) 31. பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) பல்லவையுள் - பல நூல்களிலும், நல்லவை - நல்ல நூற் பொருள்களை, கற்றலும் - கற்றுணர்தலும்; பாத்து - (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு - (தானும்) உண்டு, ஆங்கு - அந்நிலையில், இல்லறம் - இல்லாளோடு கூடிச் செய்யும் அறமானது, முட்டாது - குறைவுபடாமல், இயற்றலும் - செய்தலும்; வல்லிதின் - ஊக்கத்தொடு, தாளின் - முயற்சியால், ஒரு பொருள் - செய்தற்கரிய செய்கையை, ஆக்கலும் - செய்து முடித்தலும்; இ மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கல்விகளெல்லாவற்றிலும், தலை - சிறந்த கல்வியாம்; (எ-று.) (க-ரை.) கற்கத் தக்கவற்றைக் கற்றலும், இல்லறத்தை முட்டின்றிச் செய்தலும், ஊக்கத்தோடு முயற்சியால் அருஞ்செயல் ஆற்றலும் தலைசிறந்தன.
|