பக்கம் எண் :

30

பல்லவை - பல அவை, சபையுமாம். முட்டாது : எதிர் மறை வினையெச்சம்; முட்டு : பகுதி, வல்லிது : வலிமை என்னும் பண் படியாகப் பிறந்த ஒன்றன்பால் வினையாலணையும் பெயர். தாளின் : இன் : உருபு, ஐந்தாம் வேற்றுமை, ஏதுப்பொருள், ஆக்கல்: அல் ஈற்றுத் தொழிற்பெயர். கேள்வி : தொழிற்பெயர். தொழிலாகு பெயருமாம். கேள்வியுளெல்லாம் : உருபுமாறி நின்றது : இலக்கணப் போலி.

(31)

 32. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச்
சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

(இ-ள்.) மொழி நோக்கி - (நூல்களில்) சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் - நுட்பமாகிய பொருள்களை, கொளலும் - கொள்ளுதலும்; நூற்கு - நூல்களுக்கு, ஏலா - தகாத. வெண்மொழி - பயனற்ற சொற்களை, வேண்டினும் - பிறர் விரும்பினாலும், சொல்லாமை - சொல்லா தொழிதலும்; நல்மொழியை, (உயிர்க்கு உறுதி கொடுக்கும்) நல்ல சொற்களை, சிற்றினம் - கீழ்க்குலம், அல்லார்கண் - ஆகாதவரிடத்து, சொல்லலும் - சொல்லுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், கற்று அறிந்தார் - பல நூல்களையும் படித்தறிந்தவர், பூண்ட - மேற்கொண்ட, கடன் - கடமையாம்; (எ-று.)

(க-ரை.) சொற் போக்குக்கு இயையப் பொருள் கொள்வதும், பயனற்ற சொற் கூறாமையும், நல்ல நூற்கருத்துக்களை அவற்றை விரும்பிப் போற்றுவார்க்குக் கற்பிப்பதும், கல்வியின் பயனாம்.

நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும் என்பதற்கு நுட்பமாகிய பொருளை யுணர்த்துஞ் சொற்களை ஆராய்ந்து அவற்றின் பொருளை யுள்ளபடி உணர்ந்து கொள்ளுதல் எனவும் பொருள் கூறப்படும். வெண்மொழி - வெண்மைமொழி : பண்புத் தொகை. வெண்மை - நுட்பமின்மை, கருத்தாழமின்மை வேண்டினும் : உம் எதிர்மறைப் பொருள். சிற்றினம் - சிறுமை+இனம். சிறிய இனமாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லென்போரும், விடரும், தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு." இஃது அறிவைத் திரித்து.