பக்கம் எண் :

31

இருமையுங் கெடுக்கும் இயல்பிற்று. சொல்லாமை : இறுதி உம் தொக்கது.

(32)

 33. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.

(இ-ள்.) கோல் அஞ்சி - (தன்) செங்கோலைப் பயந்து, வாழும் குடியும் - வாழ்கின்ற குடியும்; குடிதழீஇ - குடிகளைத் தழுவி, ஆலம் வீழ்போலும் - ஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,) அமைச்சனும் - மந்திரியும், வேலின் - வேலினிடத்து, கடைமணி போல் - பூண்போல, திண்ணியான் - திட்பமுடையவனது, காப்பும் - காவலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், படை வேந்தன் - படையையுடைய அரசன், பற்றுவிடல் - பற்றுவிடாது ஒழுகுக; (எ-று.)

(க-ரை.) அரசியலுக்கு அடங்கி நடக்கும் குடிகளையும், குடிகளை ஓம்புவதில் சூழ்கண்ணாக விளங்கும் அமைச்சனையும், குடியை நீங்காதபடி உறுதியாகக் காக்குந் தொழிலையும் அரசன் கைவிடலாகாது என்பது.

கோல் அஞ்சி - கோலை அஞ்சி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. கோலுக்கு அஞ்சி என்று நான்காம் வேற்றுமையாக்குவாரு முளர். வாழும் என்ற குறிப்பால் கோல் பொதுமையின் நீங்கிச் செங்கோலை யுணர்த்தியது. குடி - குடிப்பிறந்தோர். தழீஇ : செய்தென் வினையெச்சம் : தழுவு : பகுதி, தழுவி என்று இருக்க வேண்டியது விகுதிகெட்டு, பகுதி தழி எனத்திரிந்து உயிர்நீண்டு அளபெடுத்து வந்தது, சொல்லிசை யளபெடை, வீழ் : வீழ்வது எனக் காரணக்குறியால் வந்தது, இகர விகுதி புணர்ந்துகெட்டது, தொழிலாகு பெயருமாம். அமைச்சன் அரசனோடு இருப்பவன் என்ற பொருளில் அமாத்யன் என்ற வட சொற்றிரிபு என்ப. விடல் : எதிர்மறை வியங்கோள் வினைமுற்று ‘பற்றி விடல்' என்ற பாடங் கொள்ளுமிடத்துக் கைக் கொண்டு விடாதிருக்க என்று பொருள் கொள்க.

(33)

 34. மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார்.