பக்கம் எண் :

33

கேள்வி - மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்கரை - நூல்களின் முடிவை, கண்டானும் - (ஐயந்திரிபறக்) கண்டவனும்; மைந்நீர்மை - குற்றத் தன்மை, இன்றி (தன்னிடத்தில்) உண்டாகாதபடி, மயல் - மனக்கலக்கம், அறுப்பான் - ஒழித்தவனும்; இம்மூவர் - ஆகிய இம் மூவரும், மெய் நீர்மை - அழிவின்மையாகிய தன்மையுடைய, மேல் - முத்தி உலகத்தில், நிற்பவர் - நிற்பவராவர்; (எ-று.)

(க-ரை.) மெய்ப்பொருள் காணும் அறிவுடையவனுக்கும், நூல் தேர்ச்சி மிகுந்தவனுக்கும், உலகப் பற்றைவிட வல்லவனுக்கும் முத்திபெற ஏது உண்டு.

முந்நீர் - கடல் : படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யவல்ல நீர் : காரணக்குறி; இனி ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று நீரும் சேர்ந்தது எனவும் கொள்ளலாம். பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. திரை : தொழிலடியாய்ப் பிறந்த பெயர். இன் : ஐந்தனுருபு, ஒப்புப்பொருள். இயங்குதல் - நடத்தல், செல்லுதல். மேதை - அறிவுடைமை, இங்குப் பண்பாகு பெயர்; அறிவுடையவனுக்காயிற்று. நுண்ணூல் - நுண்மையாகிய நூல், நூற்கரை : ஆறாம் வேற்றுமைத் தொகை. நூல்போலுதலின் : உவமையாகு பெயர். மை - காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்கள். மேல் : பண்பாகு பெயர்.

(35)

 36. ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.

(இ-ள்.) ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)