அலந்தார்க்கு : அல என்ற பகுதியடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர். ஈந்த புகழ் - ஈந்ததனாலாய புகழ் : காரணப் பொருளில் வந்த பெயரெச்சம். இன்னாத்தகைமை - இன்னாமைக்கு ஏதுவாகிய தகைமை : காரணப் பொருள்தரும் பெயரெச்சம். கேள்வி - கேட்டலா லுண்டாகிய அறிவு : காரணவாகு பெயர். (41) 42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. (இ-ள்.) கழகத்தால் - சூதாட்டத்தினால், வந்த - கிடைத்த பொருள் - பொருளை, காமுறாமை - விரும்பாமையும்; பழகினும் - (பலநாள்) பழகினாலும், பார்ப்பாரை - பிராமணரை, தீப்போல் - தீக்கு அஞ்சி நடப்பதுபோல், ஒழுகல் - அஞ்சி நடத்தலும்; உழவின் கண் - பயிர் செய்தலில், காமுற்று - விருப்பம் செலுத்தி, வாழ்தல் - வாழுதலும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், வேளாண்குடிக்கு வேளாண்மையுடைய குலத்துக்கு, அழகு என்ப - (பெரியோர்) அழகு என்று சொல்வர்; (எ-று.) (க-ரை.) சூதாடிப் பொருள் சம்பாதியாதிருத்தலும், பிராமணரை நெருப்புக்கு ஒப்பாக நினைந்து நடத்தலும், உழுது பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்குச் சிறந்த அறம் ஆகும். காமுறாமை, ஒழுகல், வாழுதல் என்பன பெயர்ச்செவ்வெண்ணாதலால், மூன்றும் என்னும் தொகையோடு ஈற்றில் முற்றும்மை பெற்றது. காமுறாமை : எதிர்மறைத் தொழிற்பெயர். பழகினும் : உம் : எதிர்மறை. கழகம் - சூதாடுமிடம், இடவாகுபெயராய்ச் சூதை யுணர்த்திற்று. தீப்போல் ஒழுகலாவது - குளிர் காய்வார் நெருப்பை மிக நெருங்காமலும் நீங்காமலும் ஒத்த இடத்து இருப்பதுபோல் பார்ப்பார் இடத்தும் நின்று நடத்தல். பார்ப்பார் - மறைநூல். பார்ப்பார் : காரண இடுகுறிப் பெயர். (42) 43. வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.
|