லால், அவை உவமைகளாயின. இம் முதற் பாட்டிற் கூறப்பட்ட ‘திரிகடுகம்' என்ற சொல்லே சிறப்பு நோக்கி இந் நூலுக்குப் பெயராகக் கொள்ளப்பட்டது : உவமையாகு பெயர். அருந்ததி - எழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி. கற்புடையார் பலரினும் இவர்க்கு உயர்வு எங்ஙனம் என்னில் விண்மீன் நிலையிலும், எழுமுனி வட்டம் என்ற நாட்கூட்டம் முன்பக்கம் அடியில் இருக்கும் மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிட்டமீனோடு துணையாய் மின்னுவது. மாண்டார் - சிறந்தார்; மாண் : முதனிலை, உரிச்சொல், அரில் - ஐயந்திரிபுகள், சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் என்ற தொடரிலுள்ள பொருளோடு ‘நுணங்கிய கேள்விய ரல்லார்' என்ற குறளில் கருத்தை ஒப்பு நோக்குக. (1) 2. தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர் இன்குணத்தார் ஏவின செய்தலும் - நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். (இ-ள்.) தன் குணம் - தனது (குடிப்பிறப்பின்) குணம், குன்றா - குன்றாமைக்கு (ஏதுவாகிய), தகைமையும் - ஒழுக்கமும், தா இல் - அழிதல் இல்லாத, சீர் - பெரும்புகழைத் தருகின்ற, இன் குணத்தார் - இனிய குணத்தையுடையோர், ஏவின - ஏவிய தொழில்களை, செய்தலும் - செய்வதும், நன்கு - அறத்தினியல்பை, உணர்வின் - (அறியும்) அறிவையுடைய, நான்மறையாளர் - நான்குவகைப்பட்ட வேதங்களை ஓதிய வேதியர், வழி - (கூறிய) வழியில், செலவும் - நடத்தலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், மேல் முறையாளர் - மேன்மையாகிய ஒழுக்கத்தை ஆளுதல் உடையாரது, தொழில் - தொழில்களாம்; (எ-று.) (க-ரை.) தன்குலச் சிறப்புக் கெடாத வண்ணம் ஒழுகுதலும், குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தலும், நான்மறையாளர் சொல் வழி நிற்றலும் மேலோர் செய்கை. குன்றா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தகைமை பெருமையுமாம். தாவில் என்பதைத் தாவு+இல் என்றும் பிரிக்கலாம். இங்குத் தா என்னும் முதல் நிலையே உகரச்சாரியை பெற்றுத்
|