நோய் என்றது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோர் உபசார வழக்கு. உரன்; உரம் என்பதன் போலி. உடையார் : உடைமை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர் திருந்திழையார் என்பதற்கு மேற்பொருளின்றி, திருந்து என்பதை இழைக்கு அடையாகக் கொள்ளாது பொருள் சிறப்புக்கருதி இழையார் என்பதற்கு அடையாகக் கொள்வதும் ஆம். இழை - அணி : தொழிலாகுபெயர் (44) 45. ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி யேற்றார்க் கியைவ கரப்பானும் - கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். (இ-ள்.) ஆற்றானை - (தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவாலளனை, ஆற்று என்று - செய் என்று ஏவி. அலைப்பானும் - வருத்துகின்றவனும்; ஏற்றார்க்கு - தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு, இயைவ - (கொடுப்பதற்கு) இசையும் பொருளை, அன்பு இன்றி - அன்பு இல்லாதவனாகி, கரப்பானும் - மறைத்து இல்லையென்று சொல்லும் செல்வனும், கூற்றம் - யமன், வரவு உண்மை - வருதலது உண்மையை, சிந்தியாதானும்- நினையாமல் தீமையைச் செய்தோனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், சென்று - உடல் அற்று நீங்கி, நிரயத்து - நரகத்தில் வீழ்வார் - விழுவார்; (எ-று.) (க-ரை.) செயல்வலி அற்ற ஏவலாளனை வேலைவாங்குவோனும், இரந்தவர்க்கு இயைந்ததில்லை யென்று சொல்வோனும், இறப்பை நினையாது தீத்தொழில் புரிவோனும் நரகத்து வீழ்வர். ஆற்றான் : வினையாலணையும் பெயர். ஆற்று : ஆல் விகுதி புணர்ந்து கெட்டு நின்ற ஏவலொருமை வினைமுற்று. ஏற்றார் இயைவ : வினையாலணையும் பெயர்கள் : ஏல், இயை : முதனிலைகள், நிரயம் : வடசொல். (45) 46. கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் - சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார்.
|