பக்கம் எண் :

41

(இ-ள்.) கால் - நடையில், தூய்மை - தூயது ஆகுந் தன்மை, இல்லா - இல்லாத, கலிமாவும் - குதிரையும், காழ் - கட்டுத்தறியை, கடிந்து - முறித்து, மேல்தூய்மை - (வீரனிருப்பதற்கேற்ற) மேலிடம் தூயதாம் தன்மை, இல்லாத - உடையதாயிராத, வெங்களிறும் - கொடிய யானையும்; கறுவி - (மாணாக்கன் மேல்) வைரமடைந்து; சீறி - சீற்றங்கொண்டு, வெகுண்டு - சினந்து, உரைப்பான் - (பாடம்) சொல்லுவோனுடைய, பள்ளி - கல்விச்சாலையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றையும், அறிவு உடையார் - (அவற்றின் பயனின்மையை) உணர்தலுடையார், குறுகார் - சேரார்; (எ-று.)

(க-ரை.) நடைச் சிறப்பற்ற குதிரையும், ஏறிச்செல்ல உதவாத யானையும், முகமலர்ச்சியுடன் கூறாதான் பள்ளியும் வீண் என்பது.

கால் : எண்ணலளவை யாகுபெயராகிய கால் என்பது முதலாகு பெயராய் நடையை யுணர்த்தியது. இந் நடை ஐவகைப் படும். அவை : மென்னடை, விரைநடை, ஆடுநடை, சுற்றுநடை, ஓட்டநடை, கலிமா - கலினமா என்பது னகரந்தொக்கு மருவியது போலும். கலினம் - கடிவாளம் : கலிக்கின்ற மா என்னலுமாம். கலித்தல் - கனைத்தல். காழ் : பண்பாகு பெயர். சீற்றம் - சிறிது பொழுது நிகழும் சினம். பள்ளி : உம் தொக்கது. குறுகார் : எதிர்மறை வினைமுற்று.

(46)

 47. சில்சொற்பெருந்தோள் மகளிரும் பல்வகையுந்
தாளினால் தந்தவிழுநிதியும் - நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கியஉண்டியும் இம்மூன்றும்
காப்பிகழல் ஆகாப்பொருள்.

(இ-ள்.) சில்சொல் - மெல்லிய சொல்லையும், பெரும்தோள் - பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் - பெண்டிரும்; பல்வகையும் - பலவகையாலும், தாளினால் - முயற்சியினால், தந்த - தேடிய, விழுநிதியும் - சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் - எப்பொழுதும், நா - நாக்கு, தளிர்ப்ப - நீர் அருந்தும்படி, ஆக்கிய - சமைத்த, உண்டியும் - உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு - காத்தலை, இகழல் ஆகா - தாழ்த்திக் கூறுதலாகாத, பொருள் பொருள்களாம்; (எ-று.)