(க-ரை.) பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்று முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி. சிறுசொல் என்பது சில்சொல் என்றாயிற்று. சிறுமை நிரம்பாமை. தந்த : இடவழுவமைதி, விழுநிதி : பண்புத்தொகை நிலைத்தொடர். தோறு : ஏழாம் வேற்றுமை இடப் பொருண்மையையும் பன்மையையும் உணர்த்தும் இடைச்சொல். உண்டி தொழிலடியாகப் பிறந்த பெயர். (47) 48. வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (இ-ள்.) வைததனை - ஒருவன் வைததை, இன் சொல் ஆ - இனிய சொல்லாக, கொள்வானும் - கொள்கின்றவனும், நெய்பெய்த - நெய் வார்த்த, சோறு என்று - சோறு இது ஆம் என்று, கூழை மதிப்பானும் - கூழை மதிக்கின்றவனும், கைப்பு அதனை - கைக்கின்ற பொருளை, கட்டி என்று - வெல்லக்கட்டி என்று ஊறிய தன் வாயில் ஊறும்படி, உண்பானும் - உண்கின்றவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், மெய்ப்பொருள் - உண்மையாகிய பரம் பொருளை, கண்டு வாழ்வார் - கண்டு - வாழ்பவர் ஆவார். (க-ரை.) வன்சொல்லை மென்சொல்லாகவும், கூழைப் பாற் சோறாகவும், கைப்புணவை இனிப்புணவாகவும் கருதுகின்றவர் மெய்ப்பொரு ளுணர்ந்தவர். வைதது : படர்க்கை ஒன்றன்பால் இறந்தகாலச் செயப்பாட்டு வினையாலணையும் பெயர். ஆ : ஆக என்பதன் ஈறு தொக்கது. ஊறிய : செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம் மெய்ப்பொருள் உணர்ந்தவர்கட்கு உடலுக்கும் உயிருக்குமுள்ள குண வேற்றுமைகள் தெரியுமாதலால்வைதல் உடலையன்றி உயிரைச் சேராதென்றும், கைப்பும் இனிப்பும் மண்ணின் நிலைகளேயன்றி உண்மையல்லவென்றும் அறிந்ததனால், அறிவில் வேற்றுமையில்லையென்று தோன்றி உடம்பின்மேல் பற்று இல்லாதது பற்றி அவற்றைப் பாராட்டார் என்பது. கூழ் - புல்லரிசி, ஊறிய
|