கைப்பதனை என்று கொண்டு ஊறிய என்பதற்கு மிகுந்த என்றும் பொருள் கூறலாம்; இப்பொருளில் பெயரெச்சம். (48) 49. ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (இ-ள்.) ஏவு - (பெற்றோரால்) ஏவப்பட்ட, ஆதும் - எந்தக் காரியத்தையும், மாற்றும் - தன்னால் முடியாதென மறுக்கின்ற, இளங்கிளையும் - புதல்வனும்; காவாது - மனைவியைக் காவாமல், வைது - திட்டி, எள்ளி - இகழ்ந்து, சொல்லும் - பேசுகின்ற, தலைமகனும் - கணவனும்; பொய் - பொய்ம் மொழியை, தெள்ளி - ஆராய்ந்து சொல்லி, அம்மனை - தான் வாழ்கின்ற வீட்டின் செல்வத்தை, தேய்க்கும் - அழிக்கும், மனையாளும் - மனைவியும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், இம்மைக்கு - இப் பிறப்பில், உறுதி யில்லார் - எவருக்கும் பயனில்லாதவர் ஆவர்; '(எ-று) (க-ரை.) ஏவிய சொற் கேளா மக்களும், மனைவியைப் போற்றாக் கணவனும், வீட்டுப் பொருளை வீணே அழிக்கின்ற மனைவியும் இம்மையில் எவருக்கும் பயனற்றவர். ஏவாதும் ஆற்றும் இளங்கிளை என்று கொண்டு சொல்லாத காரியத்தையும் தன் விருப்பம்போல் செய்கின்ற புதல்வன் எனலுமாம். ஆது : யாது என்பதன் மரூஉ; உம் : இழிவு சிறப்பும், முற்றுப் பொருளும் தர நின்றது. எள்ளி : எள் என்னும் முதனிலையடியாகப் பிறந்த வினையெச்சம். தலைமகன் - கணவன். இம்மைக்கு என்பதில் இழிவு சிறப்பு உம் தொக்கது; கு : உருபு மயக்கம். மனை தன்னிடத்திலுள்ள செல்வத்தை யுணர்த்தலால் இடவாகு பெயர். தேய்க்கும் : பிறவினைப் பெயரெச்சம். தேய் : தன்வினை பிறவினை இரண்டுக்கும் பொது. உறுதி : தொழிலாகு பெயர். (49) 50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர் வல்லே மழையருக்குங் கோள்.
|