பிளப்பைப்போல் என்றும் ஒன்று கூடாதவர் அற்பர்; இவர்கள் தன்மை ஆராய்ந்து சொல்லப்பட வேண்டுபவை. ஒழுகியக்கண் என்பதில் அகரம் தொக்கு ஒழுகிக் கண் என்று வந்தது; கண் : ஈற்று வினையெச்சம். தேர்ந்தக்கால் : இது கால் ஈற்று வினையெச்சம். உம் இரண்டும் இறந்தது தழீஇயதனோடு உயர்வு சிறப்பில் வந்தன. ஏ இரண்டும் தேற்றம் - துணை : பண்பாகு பெயர். கல், பொருள் : இரண்டும் உவமையாகு பெயர்கள். தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். எனவே, தேராவிடத்து இத்தன்மையது எனத் தோன்றாப் பொருளாவார். (51) 52. கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும் குறியுடையோர் கண்ணே யுள. (இ-ள்.) கண்ணுக்கு - கண்களுக்கு, அணிகலம் - அணியத் தக்க பூணாவது, கண்ணோட்டம் - கண்ணோடுதல்; காமுற்ற - (கணவனால்) விரும்பப்பட்ட, பெண்ணுக்கு - குலமகளுக்கு, அணிகலம் - அணிகலனாவது, நாண் உடைமை - நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் - பொருந்துகின்ற, மறுமைக்கு - மறுப்பிறப்புக்கு, அணிகலம் - அணிகலனாவது, கல்வி - கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே - ஆராயும் இயல்புடையாரிடத்தே உள - உண்டு; (எ-று.) (க-ரை.) கண்ணோட்டத்தாற் கண்ணும், நாணத்தாற் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது. அணிகலம் : வினைத்தொகை. கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை; அஃது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன. ஓட்டம் - அம் : கருவிப் பொருளணர்த்தும். உடைமை : இடைநிலைத் தீவகவணி. சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார். உள : உண்மை என்னும் பண்படியாகப் பிறந்த பலவின்பால் வினைமுற்று. (52)
|