53. குருடன் மனையாள் அழகும் இருள்தீரக் கற்றறி வில்லான் கதழ்ந்துரையும் - பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும் எண்ணின் தெரியாப் பொருள். (இ-ள்.) குருடன் - குருடனுடைய, மனையாள் - மனைவியினது, அழகும் - அழகும்; இருள்தீர - மயக்கம் நீங்க, கற்று - (உண்மை நூலைக்) கற்று, அறிவிலான் - அதன் பொருளை அறியாதவன், கதழ்ந்து - விரைந்து, உரையும் - சொல்லுகின்ற சொல்லும்; பற்றிய - பொருந்திய, பண்ணின் - பண்களை, தெரியாதான் - அறியாதவன், யாழ் - யாழின் இசையை, கேட்பும் - கேட்டலும் ; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்; எண்ணின் ஆராயின், தெரியா - மூவர்க்கும் முறையே தெரியாத, பொருள் - பொருள்களாம்; (எ-று.) (க-ரை.) குருடனுக்கு அவன் மனைவியழகும், படிப்பில்லாதவன் அவையிற் பேசும் பேச்சும், இசையில்லாதவன் கேட்கும் பாட்டும் பயனற்றவை என்பது. இருள் - பேதைக்குணம் : உவமையாகு பெயர். கதழ்ந்து - கதழ் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். உரை : முதனிலைத் தொழிற் பெயர். யாழ் : கருவியாகுபெயர் கேட்பு : பு ஈற்றுத் தொழிற்பெயர். பற்றிய - விரும்பப்பட்ட எனலுமாம். பண் : காரிய வாகுபெயர். (53) 54. தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயம் காய்வின்கண் கூறலும் - பின்பயவாக் குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (இ-ள்.) தன்பயம் - தனக்கு வரும் பயனை, தூக்காரை - ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் - அடுத்தலும்; காய்வின்கண் - ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா - தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் - நன்மையாகிய பயனைத் தரும் மொழிகளை, கூறலும் - சொல்லுதலும்; பின் பயவா - பின்னே பயன் படுதலில்லாத, குற்றம் - குற்றங்களை, பிறர்மேல் - மற்றவர்கள்மேல், உரைத்தலும் - சொல்லுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தெற்றென - (இன்னது இன்ன பயனைத் தரும்
|