ஒற்று - துறந்தார்முதலியமாற்றுருக்கொண்டு பகைவரிடஞ்சென்று ஒன்றுபட்டு அங்கு நடப்பனவற்றை ‘அறிந்துவந்து உரைப்பவர். ஒற்று : முதனிலைத் தொழிலாகுபெயர். (55) 56. முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (இ-ள்.) முந்தை - (முன்னதாகிய) இளமைப் பருவத்தில், எழுத்தின் வரவு - கல்வியறிவு உண்டாதலும்; பிற்பாடு - அதன்பின்பு, உணர்ந்து - கல்விப் பொருள் உணர்ந்து, தந்தையும் தாயும் - தந்தையையும் தாயையும், வழிபட்டுவந்த - போற்றிவந்த, ஒழுக்கம் - ஒழுக்கமும்; பெருநெறி - பெரியோரது வழியை, சேர்தல் - சேர்தலும்; இமூன்றும் ஆகிய இம் மூன்றும்; விழுப்ப நெறி - உயர்வாகிய நெறியை, தூரா ஆறு - தூர்க்காத வழியாம்; (எ-று.) (க-ரை.) இளமையில் கல்வி கற்றுப், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றிச், சான்றோர் செல்லும் நெறியிற் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம். முந்தை : பண்புப் பெயர். இஃது இளமையின்மேல் நின்றது எழுத்தின் வரவு - எழுத்தினது வரவு. ஆறாவது வினைமுதற் பொருண்மையில் வந்த காரகம். தூரா என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முதல் நிலையாகிய தூர் என்பது தன்வினை பிறவினை யிரண்டுக்கும் பொது. விழுப்ப நெறி : விழுப்பத்தையுடைய நெறி எனின் இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்க தொகை. (56) 57. கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான் ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும் கேள்வியுள் இன்னா தன. (இ-ள்.) கொட்டி - தாளவோசையால், அளந்து - அளவிட்டு அமையாப் பாடலும் - அதற்குத் தகுந்தபடி பாடாத பாடலும் தட்டி - கைதட்டி, து பிச்சை - சோற்றுப் பிச்சைக்கு, புக்கு - போய்,் உண்பான் - வாங்கி உண்ணுபவனுடைய, பிளிற்றலும் - இரைதலும்
|