துச்சு இருந்தான் - ஒதுக்குக்குடி யிருந்தவன், ஆளும் கலம் - (அவ்வில்லத்தான்) ஆளும் பண்டங்களை, காமுறுதலும் - விரும்புதலும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், கேள்வியுள் - கேட்கப்படுபவைகளுள், இன்னாதன - இன்பத்தைத் தராதனவாம்; (எ-று.) (க-ரை.) தாளத்துக்கு ஒவ்வாப் பாட்டும், பிச்சையெடுத்துண்பான் பேரிரைச்சலும், ஒட்டுக்குடியன் பெருவீட்டின் பொருளைக்குக் கருதுதலும் இன்பத்தைத் தராதவை. காட்டி : தொழிலடியாகப் பிறந்த பெயர்; இ : செயப்படு பொருள் விகுதி, ஓசையை யுணர்த்தின் கருவியாகு பெயர். து - உணவு : முதனிலைத் தொழிலாகு பெயர். துச்சு - சிறிது பொழுது தங்குமிடம். (57) 58. பழமையை நோக்கி அளித்தல் கிழமையால் கேளிர் உவப்பத்தழுவுதல் - கேளிராய்த் துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும் மன்னற் கிளையான் தொழில். (இ-ள்.) பழமையை - (நண்பரின்) பழையராகுந் தன்மையை. நோக்கி - பாராட்டி, அளித்தல் - (அவருக்கு வேண்டுவனகொடுத்து) காப்பாற்றுதலும், கேளிர் - சுற்றத்தார், உவப்ப - மகிழும்படி. கிழமையால் - உரிமையால், தழுவுதல் - அணைத்தலும்; கேளிர் ஆய் - உறவினராய், துன்னிய - குழும்படி, சொல்லால் - இன்சொற்களால், இனம் திரட்டல் - நல்லினத்தைக் கூட்டலும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், மன்னற்கு இளையான் - இளவரசனுடைய, தொழில் - தொழில்களாம்; (எ-று.) (க-ரை.) இளவரசனா யிருப்பவன் முன்னோரோடு பழகிவந்த அமைச்சர் முதலியோரைப் பேணுதலும், இனத்தாரை உரிமையுடன் காப்பாற்றுதலும், நல்லவரைத் தனக்கு நட்பாக்குதலும் செய்ய வேண்டும் என்பது. பழமையாவது பழமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவர்க்கு உடன்படும் நட்பு. துன்னிய : செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். அமைச்சன் அரசனுக்குக் கிளையாயிருத்தல் பற்றி மன்னற்கிளையான் அமைச்சன் எனலுமாம். திரட்டல் : பிறவினைத் தொழிற்பெயர். (58)
|