தாவு என்றாயிற்று. தா+இல் என்னுமிடத்துத் தா : முதனிலைத் தொழிற்பெயர். நான்மறை - நான்கு மறை : நான்கு கூறுமாய் மறைந்த பொருள்களுமுடைமையால் நான்மறை என்றார். அவை பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும் ஆம். இவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர். (2) 3. கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம் சிறியாரைக் கொண்டு புகழுமிம் மூன்றும் அறியாமை யான்வருங் கேடு. (இ-ள்.) கல்லார்க்கு - கற்றறியாதவர்க்கு, இனன் ஆய் - உறவினனாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - மனவுறுதிகொண்ட, இல்லாளை - மனைவியை, கோலால் புடைத்தலும் - கோலினால் அடித்தலும், இல்லம் - தம் வீட்டுள், சிறியாரை - சிற்றறிவினரை, கொண்டு - உடன் கொண்டு, புகலும் - புகுதலும், இம் மூன்றும் - ஆகியஇம் மூன்று செயல்களும், அறியாமையான் - தன் அறியாமையினாலே, வரும் கேடு - விளைகின்ற கேடுகளாம்; (எ-று.) (க-ரை.) மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் கேட்டைத் தருவன. இல்லாள் - மனைவி, இல்லறத்துக்கு உரியவள் என்பதுபொருள். காழ் - உறுதி, ஈண்டு மனத்திண்மை, கற்பு, கேடு : ஆகுபெயர், கேட்டைத் தருவது என்று பொருள்தருமாதலால். (3) 4. பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக் காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும் சாவ வுறுவான் தொழில். (இ-ள்.) பகை முன்னர் - தன் பகைவர் முன்னே, வாழ்க்கை செயலும் - செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும், தொகை நின்ற - தொகுதியாக நின்ற, பெற்றத்துள் - மாடுகளின் நடுவே, கோல் இன்றி - கோல் இல்லாமல், சேறலும் - செல்லுதலும், முன் - முன்னே (நின்று), தன்னைக் காய்வானை - தன்னை வருத்துபவனை,
|