திருக்கின்றமையால் எப்பிறப்பும் நலமுடையதன்று. பிறப்பு நீங்க முயல வேண்டும் என்பது. பேஎய், பாஅய் : செய்யுளிசைநிறை அளபெடைகள். வெருவு : தொழிற் பெயர். நிரப்பு - மங்கல வழக்கு : எதிர்மறை இலக்கணையால் நிரம்பாமையை யுணர்த்தி அதன் காரணமாகிய மறுமைக்கு ஆகுபெயராயிற்று. (60) 61. ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (இ-ள்.) ஐஅறிவும் - ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய - (தீயவழியில் செல்லாது) தம்மிடத்து அடங்கி நிற்கும்படி, ஒழுகுதல் - நடத்தலும்; எய்துவது அரசனுக்கு வருவதாகிய தீங்கை, எய்தாமை - வராதபடி, முன்காத்தல் - முன் அறிந்து தடுத்தலும்; வைகலும் - நாடோறும், மாறு - (தம்முடைய) பகைமையை, ஏற்கும் - ஏற்றுக்கொள்ளுதற்குரிய, மன்னர் நிலை - அரசருடைய இருப்பை, அறிதல் - ஒற்றர்களால் அறிந்து அதற்குத் தக்கபடி செய்தல்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், சீர் ஏற்ற - புகழை மேற்கொண்ட, பேர் அமைச்சர் - பெருமையாகிய அமைச்சர்களின், கோள் துணிவுகளாம்; (எ-று.) (க-ரை.) பேரமைச்சர்கள் ஐம்பொறிகளை அடக்கி நடத்தவும், அரசனுக்குத் தீங்கு வராமல் காக்கவும், பகைவருடைய நிலைமையை அறிந்து நடக்கவும் வல்லவர்களாயிருக்க வேண்டும். ஐம்பொறிகள் - மெய், வாய், கண், மூக்கு, செவி, எய்துவது : எய்து என்னும் வினையினடியாகப் பிறந்த எதிர்கால வினையாலணையும் பெயர், மாறு : முதனிலைத் தொழிற் பெயர். நிலை : தொழிற்பெயர். (61) 62. நன்றிப் பயன் தூக்கா நாணிலியும் சான்றோர்முன் மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர் எச்சம் இழந்துவாழ் வார். (இ-ள்.) நன்றிப்பயன் - ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை, தூக்கா - அளந்தறியாத, நாண் இலியும் - நாண
|