பக்கம் எண் :

56

நன்று - அறத்தை, அறியும் - அறியக்கூடிய மாந்தர்க் மக்கட்கு, உள - உண்டு; (எ-று.)

(க-ரை.) வறியோரைக் காக்கும் செல்வமும், பொருள்களின் நிலையாமையை யறிந்து நடக்குந் தன்மையும் எவ்வுயிர்க்கும் இன்பம் அளிக்கும் செம்மையும் அறமுணர்ந்தவர்களிடத்திலேயே உண்டு என்பது.

ஒன்று - எண்ணல் அளவையாகு பெயர். உடைமை : பண்பாகு பெயர். உலகு : இடவாகு பெயர். நில்லாமை . நிலையாமை, நில்லாதவற்றை நிலையின வென்றுணர்வது புல்லறிவாண்மை எனப்படும். உருவ : பலவின்பால் வினையாலணையும் பெயர்.

(68)

 69. அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து
நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும்
பெறுமா றரிய பொருள்.

(இ-ள்.) அரும்தொழில் - (உழுதல் பெருஞ்சுமை தாங்குதல் முதலிய) அரிய தொழிலை, ஆற்றும் பகடும் - செய்யவல்ல கடாவும், திருந்திய - குற்றமற்ற, மெய்நிறைந்து - உடலிலக்கணம் நிரம்பி, நீடு இருந்த - நெடுநாள் (மணமின்றி) இருந்த, கன்னியும் - இளம் பெண்ணும்; நெறிமாறி - வழிதப்பி, நொந்து வந்த பசித்துவந்த, விருந்தும் - விருந்தினரும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், பெறும் ஆறு - பெறுகின்ற வழியில், அரிய பொருள் - அரிய பொருள்களாம்; (எ-று.)

(க-ரை.) நிலத்தையுழவல்ல பாரம் சுமக்கும் எருதும், உடலுறுப்பிலக்கணம் அமைந்த கன்னியும், வழிதப்பிப் பசித்து வருந்தும் விருந்தும் கிடைத்தற்கரிய பொருள் என்பது.

மெய் - மெய்யின் இயல் : பொருளாகுபெயராய்த் தன் இலக்கணத்தை யுணர்த்திற்று. வந்த : இடவழுவமைதி. உயர் திணையாகிய கன்னி மிகுதி பற்றி மூன்றும் என்னும் அஃறிணை முடிபேற்றது.

(69)

 70. காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்
தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வ ரெனப்படு வார்.