(இ-ள்.) காவோடு - சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் - அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் - தோண்டுவித்தவனும்; நாவினால் - நாவினால் ஓதி, வேதம் - வேதத்தை, கரை கண்ட - முடிவுகண்ட, பார்ப்பானும் - அந்தணனும்; தீது - தீய வழியை, இகந்து - கடந்து, ஒல்வது - (தனக்கு) இசையும் பொருளை, பாத்து - பகுத்து, உண்ணும் - உண்கின்ற, ஒருவனும் - ஒப்பற்ற இல்லறத்தானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், செல்வர் எனப்படுவார் - செல்வத்தையுடையா ரென்று கருதப்படுவார்; (எ-று.) (க-ரை.) தோப்பும் குளமும் அமைத்தவனும் மறைநூலோதி யுணர்ந்தவனும், பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துண்ணும் இல் வாழ்வானும் உண்மைச் செல்வராவர் என்பது. காவோடு குளந்தொட்டான் என்பதில் மூன்றனுருபு வேறு வினை உடனிநிகழ்ச்சியாதலால், கா என்றதற் கேற்ப உண்டாக்குதல் என்னுந் தொழில் வருவிக்கப்பட்டது. கரை கண்ட என்பது ஒரு சொல்லின் தன்மையது. (70) 71. உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும் காண அரியவென் கண். (இ-ள்.) உடுத்த ஆடை - உடுக்கப்பட்ட ஆடை, இல்லாதார் - இல்லாதவர், நீர் ஆட்டும் - நீராடுதலும்; பெண்டிர் பெண்கள், தொடுத்து - (பிறரோடு) வழக்குத் தொடுத்து, ஆண்டு - அங்குள்ள, அவை - சபைகளிடத்தில், போர் புகலும் - போர்க்குப் புகுதலும்; கொடுத்து - பிறர்க்குக் கொடுத்து, அளிக்கும் காக்கின்ற; ஆண்மை யுடையவர் - ஆண் தன்மையுடையவரது, நல்குரவும் - வறுமையும், இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், என் கண் - என் கண்கள், காண அரிய - பார்க்கத் தகுவன வல்லவாம்; (எ-று.) (க-ரை.) ஆடையின்றி நீரில் இறங்கிக்குளிப்பதும், பெண்கள் வழக்குத் தொடுத்து மன்றேறுதலும், கொடையாளர்கள் வறுமை யுறலும் காணக்கூடிய வல்ல என்பது. உடுத்தாடை என்பதில் உடுத்த என்ற பெயரெச்சத்து ஈறு தொகுத்தல். ஆட்டு : பிறவினை முதனிலைத் தொழிற்பெயர். நல்
|