பக்கம் எண் :

58

குரவு என்ற தொழிற் பெயரில் நல்கூர் முதனிலை. "உடுத்தலால் நீராடார், ஒன்றுடுத் துண்ணார், உடுத்தாடை நீருட் பிழியார் - விழுத்தக்கார், ஒன்றுடுத்தென்றும் அவைபுகார் என்பதே, முந்தையோர் கண்ட முறை" என்ற ஆசாரக்கோவை யடிகளும் காண்க.

(71)

 72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.

(இ-ள்.) நிறை - புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும், நெஞ்சு உடையானை - நெஞ்சுடையவனுக்கு, நல்குரவு அஞ்சும் - வறுமை பயப்படும்; அறனை - அறத்தையே, நினைப்பானை - நினைக்கின்றவனுக்கு, அல்பொருள் - பாவம், அஞ்சும் - பயப்படும்; மறவனை - கொலையாளிக்கு, எவ்வுயிரும் - எல்லா உயிர்களும், அஞ்சும் - பயப்படு; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும் திறவதில் - வன்மைகளுள், தீர்ந்த பொருள் - சிறப்பாக முடிந்த பொருள்களாம்; (எ-று.)

(க-ரை.) வறுமை நிறைநெஞ்சுடையானைச் சேரவும், மறம் அறநினைப்பாளனை யணுகவும், எவ்வுயிரும் கொலையாளியைக் காணவும் அஞ்சும் என்பது.

நிறை நிறுத்தல், தொழிற்பெயர். முன்னர் அறம் என்றமையால் அல்பொருள், பாவம் அல்லது மறம் எனப்பட்டது. திறவது : பண்புப் பெயர். திறவதிற் றீர்ந்த பொருள் என்பதற்கு வேறுபாட்டில் நீங்கித் தம்முட் சிறந்த பொருளுள்களாம் என்றும் பொருள் கூறலாம்.

(72)

 73. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.

(இ-ள்.) இரந்துகொண்டு - (இல்லாமையால் பிறரிடம்) கெஞ்சிப் பெற்று, ஒண்பொருள் - ஒள்ளிய பொருளை, செய்வல் என்பானும் - ஈட்டுவன் என்று கூறும் இரப்போனும்; பரந்து - (பலரிடத்தும்) சென்று, ஒழுகும் நடக்கின்ற, பெண்பாலை - பெண்வகுப்பைச் சேர்ந்த வேசையை,பாசம் என்பானும்