கை வாங்கி - முன் விட்டு நீக்கி, கோடலும் - பின் அவனை நட்புக் கொள்ளுதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்று செயல்களும், சாவ உறுவான் - சாகவேண்டியவனுடைய, தொழில் - செய்கைகளாம்; (எ-று.) (க-ரை.) பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும். பகை - பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் - பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் - பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் - ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் - இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை. (4) 5. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் - உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரம் காட்டு நெறி. (இ-ள்.) வழங்கா - யாவரும் இறங்கப் பாராத, துறை இழிந்து - துறையில் இறங்கி, நீர் போக்கும் - பெரும் நீரில் போதலும், ஒப்ப - தனக்கு ஒப்பாக, விழைவு இல்லா - விருப்பமில்லாத, பெண்டீர் தோள் - வேசையர் தோளை, சேர்வு - சேர்தலும், உழந்து - வருந்த, விருந்தினனாய் - பிறர்க்கு விருந்தாளியாகி, வேற்றூர் - அயலூரில், புகலும் - புகுதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், அரும் - (ஒருவனுக்கு) அரிய, துயரம் - துன்பத்தை, காட்டும் நெறி - காட்டும் வழியாம்; (எ-று.) (க-ரை.) ஆறு முதலியவற்றிற் பழகாத துறையில் இறங்கிச் செல்லுதலும், தன்மேற் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் செல்லுதலும் இன்பமன்றித் துன்பத்தையே செய்யும். வழங்காத் துறை - வழங்காத துறை, வழங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு - போதல் : தொழிற்பெயர்,
|