பக்கம் எண் :

64

(பலருக்கும் பொதுவாய் நின்று) தனது தோளைக் கொடுத்து, வாழும் - வாழ்கின்ற, கணிகையும் - வேசையும்; நாள் - ஒவ்வொரு நாளும், கழகம் பார்க்கும் - சூதாடும் இடத்தைத் தேடி ஆடுகின்ற, நயம் இலாச் சூதனும் - நீதியில்லாத சூதாடியும்; வாசி கொண்டு - மிக்க வட்டம் வாங்கி, ஒள் பொருள் - ஒள்ளிய பொருளை, செய்வானும் - தேடுவானும், இ மூவர் - ஆகிய இந்த மூவரும், ஆசைக் கடலுள் - ஆசையாகிய கடலில், ஆழ்வார் - அழுந்துவராவர், (எ-று.)

(க-ரை.) பொருட் பெண்டிர் ஆகிய வேசையும், சூதாடியும், மிகுந்த வட்டி வாங்கிப் பொருள் ஈட்டுவானும் பேராசை பிடித்தவர் என்பது.

ஆசைக்கு முடிவில்லை யாதலால் அதனைக் கடலென உருவகித்துள்ளார்; கணிகைத்துறை போலுதலாவது வேண்டினார் யாரும் அடைந்து இன்பங்கொள்ள இசைதல். நாள் - நாளும் : உம் : முற்றுப் பொருள்; தொக்கது. வாசி - வட்டம், வட்டி : திசைச்சொல்.

(81)

 82. சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லான் வழங்கும் நெறி.

(இ-ள்.) சான்றாருள் - (நற்குணங்களால்) நிறைந்தவரிடத்தில் சான்றான் எனப்படுதல் - நற்குணங்களால் நிறைந்தவன் என்று கருதப்பட நடத்தலும்; எஞ்ஞான்றும் - செல்வம் உற்ற காலத்தும் அற்ற காலத்தும், தோய்ந்தாருள் - (ஒருதன்மையராய்) நட்புக் கொண்டு கலந்தவரிடத்து, தோய்ந்தான் - நட்புக்கொண்டு கலந்தவன், எனப்படுதல் - என்று கருதப்பட நடத்தலும்; பாய்ந்து எழுந்து - (தம்மேல் கோபத்தோடு) பாய்ந்தெழுந்து, கொள்ளாருள் - தமது நற்சொல்லை ஏற்றுக்கொள்ளாதவரிடத்து, கொள்ளாத - அவர் ஒப்புக்கொள்ளாத சொற்களை, கூறாமை - சொல்லாதிருத்தலும்; இ மூன்றும் ஆகிய இம்மூன்றும், நல் ஆள் - யாவருக்கும் நல்லவனாந் தன்மையை ஆளுவோன், வழங்கும் - மேற்கொள்ளும், நெறி - நெறியாம்; (எ-று.)

(க-ரை.) நல்லாருள் நல்லா ரெனப்படுதலும், நண்பரொடு நட்புக்கொள்ள வல்லா ரெனப்படுதலும், தன்பேச்சுச் செல்லா இடத்திற் செல்லாதிருத்தலும் நல்லவர் குணம் என்பது.