பக்கம் எண் :

66

மூவரும், நல்குரவு சேரப்பட்டார் - வறுமையால் பீடிக்கப்பட்டவராவர்; (எ-று.)

(க-ரை.) குளத்துக்கு நீர் இன்மையும், குழவிக்குப் பாலின்மையும்; மாந்தருக்கு அறிவின்மையும் நல்குரவு எனப்பட்டன என்பது.

வாய் - வழி, குளன் : குளம் என்பதன் போலி. சேய மரபில் - உயர்ந்த குலத்தில் எனவும், உயர்ந்த முறையில் எனவும் பொருள் கொள்ளலாம். இம் மூவரும் நல்குரவு அடைந்து வருந்துதல் உறுதியாதலால், துணிவுபற்றி நல்குரவு சேரப்பட்டார் என இறந்த காலத்தாற் கூறினார். சேய் மரபில் என்றதாவது நல்லாசிரியரிடத்து அவர் குறிப்பின்வழி ஒழுகி முன்னர் நிகண்டு கற்று ஆராய்ச்சி செய்து இலக்கணநூல் முதலியவற்றைக் கற்பது என்பதாம்.

(84)

 85. எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.

(இ-ள்.) எள்ளப்படும் - (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் - முறையை உடையதாதலும்; உள் பொருளை - (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத - கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் - கூரறிவுடைமையும்; உள் பொருள் - அப் பொருளை, முட்டு இன்றி - தடையின்றி, சொல்லும் உணர்ச்சியும் - (தன் அரசனுக்குச்) சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய - அறிவுள்ள, ஒற்று ஆள் - வேவுகாரனது; குணம் - தன்மையாம்; (எ-று.)

(க-ரை.) பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் கருதத் தக்கது ஆகாதபடி செய்தலும், அவன் கருத்தறிந்து மறவாதிருத்தலும் அக் கருத்தை அரசர்க்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும், வேவுகாரர்க்குரிய குணங்களாம் என்பது.