இறுதியில் உம் தொக்கது, ஆறு என்பதை இயங்கலோடும் கூட்டுக. (88) 89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (இ-ள்.) அருளினை - அருளை, நெஞ்சத்து - மனத்திடத்து, அடை கொடா தானும் - நிறைத்து வையாதவனும்; பொருளினை - செல்வத்தை, துவ்வான் - (தானும்) நுகராது, புதைத்து - (பிறர்க்குங் கொடாமல்) பூமியில் மறைத்து, வைப்பானும் - வைக்கின்றவனும், இறந்து - தன்னிலை - கடந்து, இன்னா - பிறர்க்குத் துன்பங்தருஞ் சொற்களை, சொல்லகிற்பானும் - சொல்லவல்லவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், பிறந்தும் - மக்கட் பிறப்பிற் பிறந்திருந்தும், பிறந்து இலதார் - பிறவாதவராவர்; (எ-று.) (க-ரை.) அருளில்லாதவனும், பொருளை வீணாய்ப் புதைத்து வைக்கின்றவனும், பிறர்க்கு மனம் மிகவும் வருந்தும்படி பேசுகின்றவனும் மக்கட் பிறப்பைச் சார்ந்தவராகக் கருதப்படார் என்பது. அடை - அடைக்கப்படுவது, துவ்வான் : முற்றெச்சம்; து : முதனிலை, இறந்து - கடந்து : இற - கட. இறந்து இன்னா சொல்லகிற்பான் என்பதற்குத் தன் பகைவன் இறக்க அதன் பின்னும் தீய சொல் சொல்லவல்லவன் என்றுரைத்தலுமாம். (89) 90. ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும் அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. (இ-ள்.) பொருளை - செல்வத்தை, ஈதற்கு - பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க - தேடக்கடவன்; அறம்நெறி - அறத்தின் வழியில், சேர்தற்கு - சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க - பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை - எத்தன்மைத்தாகிய சொல்லையும், அருள் புரிந்து - அருளை விரும்பி, சொல்லுக - சொல்லக் கடவன்; இமூன்றும் -
|