பக்கம் எண் :

70

ஆகிய இம் மூன்றும், இருள் உலகம் - நகர உலகை, சேராத ஆறு - சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்; (எ-று.)

(க-ரை.) அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியிலொழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது.

ஈதற்கு : கு, பொருட்டுப் பொருள். நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது. யாதும் : உம் உயர்வு சிறப்பு. யாதும் என்பதன் உம்மையைச் சொல்லை யென்பதனோடு கூட்டுக.

(90)

 91. பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் - மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.

(இ-ள்.) உயிரை - (தாய் தந்தைமுதலிய) உயிர்களை, பெறுதிக்கண் - பெற்றவிடத்து, பொச்சாந்து - (பெற்றோர் தமக்குச் செய்த உதவியையும், தாம் அவர்க்குச் செய்ய வேண்டிய உதவியையும்) மறந்து, உரைத்தல் - இகழ்ந்து சொல்லுதலும்; இறுதிக்கண் - அவர் தம் காலமுடிவில், நாம் இழந்தோம் - நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், என்றல் - என்று இரங்குதலும்; மறு - நோய், வந்து - வந்ததினால், தன் உடம்பு - தன்னுடைய உடல், கன்றுங்கால் - மெலியுங் காலத்தில், நாணுதல் - (முன் அறஞ்செய்திலோமே யென்று தனக்குள்ளே) நாணப்படுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், மன்னா - நிலைபெறுதலில்லாத, உடம்பின் குறி - உடம்பை யுடையானிடத்துத் தோன்றும் அடையாளங்களாம்; (எ-று.)

(க-ரை.) தாய் தந்தையர் இருக்கும்போது அவரை இகழ்ந்து நடப்பதும், அவர்கள் இறந்தபோது வீணாய்த் துன்பப்படுவதும் துன்பம் நேர்ந்தபோது அறஞ்செய்யாது போனோமே யென்று நாணுவதும் உடற்பற்று மிக்க மூடர்கள் செய்கை என்பது.

பெறுதி, இறுதி : தி விகுதி பெற்ற தொழிற்பெயர்கள். நடு நின்ற ‘உயிரை' என்னுஞ் சொல் பெறுதிக்கண் என முன்னும். இறுதிக்கண் எனப் பின்னும் சென்றடைதலால் தாப்பிசைப்